மட்டக்களப்பு நொச்சிமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள தரிசனம் விழிப்புலனற்றோர் காப்பகத்தின் தேவைகளையும், நிலைமைகளையும் கண்டறியும் நோக்குடன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் ஞாயிறன்று திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இல்லத்தின் அதிபர், நிர்வாக உறுப்பினர்கள்; மற்றும் அங்கு பராமரிக்கப்பட்டு வரும் மாணவர்களோடு இல்லத்தின் தற்போதைய நிலைமைகள், குறைபாடுகள் மற்றும் எதிர்கால தேவைகள் குறித்து கலந்துரையாடினார்.
இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஷிப்லி பாறூக் இந்த காப்பகத்தில் இன, மத வேறுபாடின்றி பல்லின மாணவர்களும் ஆதரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இக்காப்பகம் பல்வேறு குறைபாடுகளுடனும் தேவைகளுடனும் இயங்குகின்ற போதிலும் இங்குள்ள மாணவர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாகவும், மதிநுட்பம் வாய்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர்,
காப்பக மாணவியொருவர் இலங்கையில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற பாடல் போட்டியொன்றில் இறுதிச் சுற்றுவரை சென்றுள்ளார்.
சில மாணவர்கள் பரா ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றி மூன்று தங்கம், மூன்று வெள்ளி மற்றும் மூன்று வெண்கலம் ஆகிய பதக்கங்களை வென்றுள்ளனர், மேலும் மாணவரொருவர் இம்முறை பாடசாலை தேர்வில் முதலிடம் பெற்றிருக்கின்றார்.
இக்காப்பகத்தின் நிர்வாகிகள் பல்வேறுபட்ட சிரமங்களுக்கு மத்தியில் பாரிய மனிதநேய பணியை தியாக மனப்பாங்குடனும், அர்பணிப்புடனும் முன்னெடுத்து சேவையாற்றிக் கொண்டிருக்கின்றமை பாராட்டத்தக்கது.
இவ்வாறனதொரு நற்பணியில் சமூகத்திலுள்ள தனவந்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள், அரசியல் வாதிகள் மற்றும் இளம் தலைமுறையினர் ஆகிய அனைத்து தரப்பினரும் எவ்விதே இன, மத பாகுபாடுமின்றி உதவ முன்வர வேண்டும்.
மேலும் எதிர்வரும் காலங்களில் தரிசனம் காப்பகத்தின் தேவைகளை நிறைவு செய்வதற்கு மாகாண சபை உறுப்பினர் என்ற வகையில் என்னால் இயன்றளவு சேவைகளை மேற்கொள்வற்கு தயாராக இருக்கிறேன் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment