20 Mar 2016

யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதை வஸ்துப் பாவனை ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நீதிபதி எம்.கணேசராசா

SHARE
யுத்தம் முடிவடைந்த பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதை வஸ்துப் பாவினை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேலே அதிகரித்துக் காணப்படுவது ஒரு
பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராசா தெரிவித்தார்.

வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான சேவைகளினூடாக மனித நேயப் பணி Serving Humanity through Empowerment and Development SHED  அமைப்பும் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த போதையில்லா உலகம் காண்போம் என்ற தொனிப்பொருளிலமைந்த போதைத் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

ஏறாவூர் றஹ{மானியா வித்தியாலயத்தில் ஞாயிறன்று மாணவர்களுக்காக இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில் அங்கு தொடர்ந்து உரையாற்றிய நீதிபதி எம்.கணேசராசா கூறியதாவது,

இப்பொழுது போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் பல இளைஞர்கள் குறிப்பாக பாடசாலை மாணவர்கள் எம்முன்னால் வந்து நிற்கின்றபோது  அவர்களுக்குப் பெருத்த தண்டனைகளைக் கொடுப்பதற்கு வழிதேடுவதை விட பெரும்பாலும் எப்படி அவர்களுக்கு நல்வழி காட்டலாம் என்பது பற்றியே நான் அதிக கவனம் எடுக்கின்றேன்.

போதைப் பொருள் பாவினைக்கு அடிமையாகும் இளையவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கினால் போதைப் பாவினையை கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்ற ஒரு சிந்தனை பல மட்டங்களில் இருந்தாலும் நான் அப்படியான கண்ணோட்டத்தில் இந்த விடயத்தை நோக்குவதில்லை.

வழிகெட்டுப் போக நினைப்பவர்களை சமுதாயத்திற்கு வேண்டியவர்களாக மாற்றுவதிலேயே நான் அதிக கவனம் செலுத்துகின்றேன்.
போதைக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு, விழிப்புணர்வு என்பவை பலனளிக்கக் கூடும்.

போதைப் பொருள் பாவினை அதிகரித்திருப்பதற்குப் பல பின்புலங்கள் உண்டு, அரசியலும், பெரும் வர்த்தகமும் இந்த விடயத்தில் பின்னணியில் இருப்பது வெளிப்படையான விடயம்.

அவர்கள் உங்களை ஒரு கருவியாகத்தான் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையைச் சீரழிக்கின்றார்கள்.

இதனை ஒட்டு மொத்த சமுதாயமும் எதிர்க்க வேண்டும்.
போதை வஸ்தை ஒழிக்க முற்படுகின்றபோது பல சவால்களையும் அச்சுறுத்தல்களையும்  எதிர்கொள்ள வேண்டிவரும்.
பெற்றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் மிகவும் அவதானமாக கண்காணிப்புடன் இருந்து கொள்ள வேண்டும்.

இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ், ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் எம்.எச்.எம். தாரிக், செட் அமைப்பின் தலைவர் கே. அப்துல் வாஜித் உட்பட இன்னும் பல அதிகாரிகளும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.






SHARE

Author: verified_user

0 Comments: