இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களும் தமது உரிமைகளைப் பேணிக் கொண்டு சுதந்திரமாக வாழக் கூடிய வகையில் ஒரு அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய
கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மங்களகமயில் வெள்ளிக் கிழமை (01) நடைபெற்ற அப்பிரதேச பிரதேச விவசாயிகளுக்கு விதைகள், மாவரைக்கும் இயந்திரங்கள், மற்றும் வேலிகளுக்குரிய முட்கம்பி என்பன வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்த நாட்டின் உயிர் நாடியாக இருப்பது விவசாயிகள் தான். உலகம் அனைத்திற்கும் உணவு கொடுப்பவர்கள் நாம் என்கின்ற வகையில் விவசாயிகளாகிய நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டியவர்கள்.
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்த வரையில், விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எமது அமைச்சின் விவசாயத்திணைக்கள அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் அவர்கள் மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். அவருடன் சேர்ந்து அதிகாரிகளும் சிறப்புடன் செயற்படுகின்றனர்.
விவசாயப் போதனாசிரியர்கள் தொடர்பான பிரச்சினை நிலவுகின்றது என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய விடயம் தான். இது ஒரு மாவட்டத்திற்கு மட்டுமான பிரச்சினை அல்ல எமது மாகாணத்தில் உள்ள பிரச்சினை. இது தொடர்பில் இப்புத்தாண்டில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
நாம் நஞ்சு உணவுகளை உண்டு வருகின்றோம் என்கின்ற கருத்து நிலவி வருகின்றது. பார்க்கும் போது அது உண்மைதான் அந்த நிலையினை மாற்றுவதற்கு விவசாயிகளால் தான் முடியும் கூடிய வரையில் நாம் இயற்கை உரங்களைப் பாவனை செய்து நல்ல நஞ்சற்ற விவசாய உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு எமது அமைச்சின் மூலம் உதவிகள் செய்வதற்கு எப்போதும் நாம் தயாராக இருக்கின்றோம்.
இந்த நாட்டில் தமிழ் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினை தொடர்பில் அனைவருமே சிந்திக்க வேண்டிய விடயம் இவற்றையெல்லாம் அப்பால் தள்ளி வைத்து விட்டு நல்லாட்சி என்கின்ற ஒரு நல்ல விடயத்திலே நாமெல்லாம் கைகோர்த்தவர்களாக இருக்கின்றோம்.
இதன் நிமித்தம் தான் எதிர்வரும் 09ம் திகதி புதிய அரசியலமைப்பை உருவாக்குகின்ற சபையாக எமது பாராளுமன்றம் மாற்றியமைக்கப்பட இருக்கின்றது. அந்த அரசியல் நிர்ணய சபையில் எமது அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அமர்ந்திருந்து எமது மக்கள் எல்லோரும் தங்களது உரிமைகளைப் பேணிக் கொண்டு சுதந்திரமாக ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழக் கூடிய விதத்தில் ஒரு சிறந்த அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய கடப்பாடுள்ளவர்களாக இருப்பார்கள் என எண்ணுகின்றேன்.
அந்தவகையில் இதற்கு முன்பு நடைபெற்ற துன்பியல் நிகழ்வுகள் நடவாத வண்ணம் இங்கு இருக்கும் சிறுபாண்மை மக்கள் அனைவரினதும் அபிலாசைகளையெல்லாம் கருத்திற் கொண்டு அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கு உதவ வேண்டும் என்று பெரும்பாண்மை பிரதிநிதிகளுக்கெல்லாம் எமது பெரும்பாண்மையின சகோதர மக்கள் சொல்லி வைக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல்வாதிகள் எல்லாம் அறிவாளிகளாகத் தான் இருக்கின்றார்கள் ஆனால் ஏனோ தெரியவில்லை இன்னும் இந்த நாட்டை ஒரு நல்ல நிலைக்கு இட்டுச் செல்வதைப் பற்றிச் சிந்திக்க வில்லை. எமது மூதாதையர்கள் பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் நமக்கு எவ்வளவோ பல கருத்துக்களையெல்லாம் சொல்லி வைத்திருக்கின்றார்கள் ஆனால் அவர்களின் கருத்துக்கள் வெறும் கருத்தக்களாகவே இருக்கின்றன. இந்த நிலை மாறி அவர்களின் கருத்துக்களையெல்லாம் உள்வாங்கி இந்த நாட்டினுடைய மக்கள் எல்லோரும் சுதந்திரமாக வாழ வேண்டியவர்கள் என்ற அடிப்படையிலே நாங்கள் நடந்து கொள்ள வேண்டிய அவசியம் நமக்கு இருக்கின்றது என அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment