பெரும்பாண்மை கட்சிக்கு இடுகின்ற வாக்குகள் எல்லாம் நாம் தமிழர்கள் அல்ல தமிழினத்தின் அடையாளத்தினைக் காட்ட முடியாது என்பதை உணர்த்தும் விதத்திலே இருக்கின்ற வாக்குகள்.
எனவே நாம் ஒவ்வொருவரும் தமிழர்களாக இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்திட வேண்டும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
புதன் கிழமை மாலை (12) களுவாஞ்சிக்குடியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்.
தேர்தல்களைப் பொறுத்த மட்டில் ஐந்து வீதங்களுக்கு குறைவான வாக்குகள் எல்லாம் கழிவு வாக்குகளாகவே கருதப்படுகின்றன. இங்கு சுயேட்சைக் குழுவில் போட்டியிடுபவர்களின் வாக்குகளும் அவ்வாறே கழிவுகளாகப் போகின்றவையே. எமது மக்கள் அவர்களின் வாக்குகளை கழிவு வாக்குகளாக ஆக்கிவிடக் கூடாது. பெரும்பாண்மை கட்சிக்கு இடுகின்ற வாக்குகள் எல்லாம் நாம் தமிழர்கள் அல்ல தமிழினத்தின் அடையாளத்தினைக் காட்ட முடியாது என்பதை உணர்த்தும் விதத்திலே இருக்கின்ற வாக்குகள்.
எனவே பெரும்பாண்மை கட்சிகளையே சுய இச்சையாளர்களாக விளங்கும் சுயேட்சைக் குழுக்களையோ கண்டு ஏமாந்து விடக் கூடாது. இந்த சுயேட்சைக் குழுவில் இருப்பவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் வேட்பாளர்களாக நியமிப்பதற்கு சந்தர்ப்பம் இருந்திருந்தால் இவர்களில் அநேகமானோர் எங்களுடன் வந்திருப்பார்கள். ஆனால் முடியவில்லை எங்களிடம் 21 பேர்வரை விண்ணப்பத்திருந்தார்கள் ஆனால் அவர்கள் இன்னமும் எங்களுடனேயே இருக்கின்றார்கள் ஏனெனில் அவர்கள் தேசியத்தை நேசிப்பவர்கள் அதற்கு முன்னணி வீரர்களாக நிற்போம் என்று முன்வந்தவர்கள் ஆனால் அவர்கள் எல்லோருக்கும் இடம்கொடுக்க முடியாதமை எங்களுக்கெல்லாம் வேதனையான விடயமே. ஆனால் அதனை அவர்கள் பெரிது படுத்தவில்லை அந்த இருபத்தொரு பேரில் ஒருசிலரைத் தவிர மற்ற எல்லோரும் எங்களுடன் இருக்கின்றார்கள் அவர்களுக்கு நல்ல காலம் வரும். அவர்கள் எங்களோடு சேர்ந்திருக்க வேண்டும். எங்களோடு சேர்ந்து சேவை செய்ய வேண்டும்.
நாம் எமது மாவட்டத்தின் எல்லாத் திக்குகளிலும் செல்ல வேண்டும் எமது வாக்குப் பலத்தினை அங்கெல்லாம் இருந்து கொண்டு வர வேண்டும். அனைத்து மக்களையும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் கழிவற்ற வாக்குகளாக மாற்றிட உழைத்திட வேண்டும். எமது தலைமையின் பின்னால் அணிதிரள வேண்டும்.
எமது தலைமை என்பது எமது புறநானூறு சொல்லுகின்றதைப் போன்று மிகவும் சான்றாண்மை மிக்க ஒரு தலைமை. அரசியலில் தத்துக் குட்டிகளாக இருந்து கொண்டு வெறும் கட்டுரைகள் மாத்திரம் விட்டுக் கொண்டு பலர் தமிழர்களுக்கு விடிவு கேட்டுத் தருவதாக இப்போது எங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்தை அப்படியே சொல்லை வேறாக்கி அச்சடித்து வந்திருக்கின்றார்கள். இதிலிருந்து விளங்குவது என்ன தமிழ் தேசியத்தின் உண்மையான அரசியற் கொள்கை உண்மையான தலைமைத்துவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலே தான் இருக்கின்றது.
உலக நாடுகளின் நிலைமைகள் சரிவருகின்ற போதுதான் நாம் விடுதலை அடையலாம் என்று தந்தை செல்வா அவர்கள் கூறியிருக்கின்றார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்தியா சுதந்திரத்திற்காகப் போராடிக் கொண்டிருந்தது. ஆனால் 1945ற்குப் பின்பு கனிந்த உலக நிகழ்வு தான் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஏதுவாக அமைந்ததது. அது போலவே நாம் 65 ஆண்டுகளுக்கு மேலாக எடுத்துக் கொண்ட பல்வேறு முயற்சிகள் தான் இன்று ஐ.நா சபையில் இருந்து எங்களுக்குச் சாதகமான ஒரு சர்வதேச நிலைமையை கொண்டுவந்திருக்கின்றது. அந்தச் சர்வதேசம் மதிக்கக் கூடிய மிகச் சிறந்த தலைமையை எங்களுடைய தலைவராக நாங்கள் கொண்டிருக்கின்றோம். அவர் பின்னாலே அணிதிரள வேண்டியவர்களாக நாங்கள் இருக்கின்றோம்.
எனவே நாம் ஒன்றாகத் திரள்வோம் நடைபெறும் தேர்தலில் வாக்குப்பொட்டிகளை எல்லாம் வீட்டுக்குப் புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுகளால் நிரப்புவோம். மட்டக்களப்பில் 17ம் திகதி இரவு எண்ணப்படுகின்ற வாக்குகள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய வீடுகளாக இருக்கட்டும். வெறும் ஓடுகள் கழியட்டும் நாம் வெற்றி பெறுவோம். மட்டக்களப்பில் நான்கு ஆசனங்களை பெறுவோம் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment