13 Aug 2015

இஸ்மாயிலுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

SHARE

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்சின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் தென்கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தேர்தலில் போட்டியிட முடியாது எனக் கோரி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னர் உரிய காலப் பகுதியில் தனது சிரேஷ்ட விரிவுரையாளர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்பதால் அவரை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடை செய்ய உத்தரவிடக் கோரியே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உச்ச பீட உறுப்பினர் சட்டத்தரணி முஸ்தபாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

இம் மனு இன்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனுதார சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரதிவாதி இஸ்மாயில் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் ஆஜராகியிருந்தனர். 

இதன்போது நீண்ட வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதேவேளை கலாநிதி இஸ்மாயில் வேட்பு மனுத் தாக்கலுக்குப் பின்னர் ஜூலை 22ம் திகதியே தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்து, அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் என சட்ட மா அதிபர் நீதிமன்றுக்கு தெரியப்படுத்தினார். 

இவற்றை செவிமடுத்த நீதிபதி, கலாநிதி இஸ்மாயில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால் அது விடயமாக இன்னொரு மனுவைத் தாக்கல் செய்யும் உரிமை மனுதாரருக்கு உள்ளது எனவும் இப்போது கலாநிதி இஸ்மாயிலை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கும் அதிகாரம் இந்த நீதிமன்றத்திற்குக் கிடையாது எனவும் அதனால் இம்மனுவை தள்ளுபடி செய்வதாகவும் அறிவித்தார். 
SHARE

Author: verified_user

0 Comments: