13 Aug 2015

நீங்களே முடிவெடுங்கள்: பிள்ளையான்

SHARE

கிழக்கைத் தமிழனே ஆளவேண்டும் என்று போராடி, சம்பந்தன் ஐயாவின் காலடியில் போய் விழுந்த நான் தன்மானத் தமிழனா அல்லது கிழக்கு ஆட்சியை தமிழனிடம் இருந்து பறித்து முஸ்லிம்களிடம் ஆளக் கொடுத்திருப்பவன் தன்மானத் தமிழனா என்று தமிழ் மக்களே நீங்கள் முடிவெடுங்கள் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார். 
சித்தாண்டி ஞானஒளி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை(11) இரவு இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், எனது அணியோடு இருக்கின்ற முஸ்லிம் உறுப்பினர்களுக்கும் சிங்கள உறுப்பினர்களுக்கும் நீங்கள் விரும்பியவாறு அமைச்சர் பதவியைக் கொடுத்து மாகாண சபையை நீங்களே நடத்துங்கள் என்று சம்பந்தன் ஐயாவின் காலடிக்குப் போய் கெஞ்சிக் கேட்டோம். கிழக்கில் தமிழ் முதலமைச்சரைக் கொண்டு வருவதில் எங்களுடைய ஆதரவு என்றும் இருக்கிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு நான் தெளிவாகச் சொன்னேன்.

 ஆனால் அவர் கண்டுகொள்ளவில்லை. நாங்களும் மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் ஐயாவின் வாக்குறுதியை நம்பினோம். ஆனால், கடைசியில் கழுத்தறுத்து விட்டார். இறுதியில் தமிழருக்குரிய கிழக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டு தமிழனை நடுத்தெருவில் விட்டு விட்டு இப்பொழுது வேடிக்கை பார்க்கிறார்.
இப்பொழுது தமிழனின் காலடிக்கு வந்து பழைய புராணம் பாடி மீண்டும் வாக்குப் பிச்சை கேட்கிறார் என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: