19 Jun 2015

மட்டு நகரிலுள்ள போசனைக்குறைபாடுகள் தீர்க்கப்பட வேண்டும்

SHARE

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசங்களிலேயே போசனைக் குறைபாட்டுப் பிரச்சினைகள் அதிகம் காணப்படுகின்றன. இவற்றினை நிவர்த்தி செய்வதற்கு திட்டமிட்ட முறையிலான நடவடிக்கைகள் அவசியம் என மவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.
பல்துறை போசாக்கு மேம்பாட்டு ஒருங்கிணைப்புக் கூட்டமொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  இதில், யுனிசெப்பின் போசாக்குத் துறைக்கான விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ, மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ். சதுர்முகம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.

தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களில் துறை சார்ந்த அபிவிருத்திகளுக்காக 50 ஆயிரம் மில்லியன் வரையான நிதிகள் செலவிடப்பட்டுள்ளன. இருப்பினும், போசாக்கு மட்டத்தினை உயர்த்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இது நிரந்தரமானதாக இருக்கும் வகையில் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழும் வாகரை, கிரான், செங்கலடி உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அதிகளவிலான போசாக்குக் குறைபாடுகள் சார் பிரச்சினைகள் காணப்படுகினறன. சமுர்த்தி, திவிநெகும உள்ளிட்ட புதிய உத்தியோகத்தர்களை மக்கள் மத்தியில் போசாக்கின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவதற்கான செயற்திட்டத்தில் ஈடுபடுத்த முடியும். உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டாலும் வறுமை அதிகமாகவே காணப்படுவது போசாக்குப் பிரச்சினைக்கு ஒரு காரணமாகும்.

போதிய விழிப்புணர்வின்மை, போசாக்கு தொடர்பான அறிவின்மை போன்ற காரணங்களே போசாக்கு தொடர்பான பிரச்சினைகளுக்குக் காரணமாகும். வெளிநாடுகளுக்கு தாய்மார் செல்லுதல், இதில் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இதற்கு இப்போது வெளிநாட்டமைச்சு இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது. போசாக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு அரச, அரச சார்பற்ற, தொண்டு நிறுவனங்களும் ஒன்றிணைந்து முறையான செயற்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் போதுதான் போசாக்குடைய  எதிர் கால சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

நேற்று நடைபெற்ற இக் கூட்டத்தில் , பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், குழந்தை நலத்துறை விசேட நிபுணர்கள், சிறுவர் நலத்துறை சார் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
SHARE

Author: verified_user

0 Comments: