12 Jan 2015

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை!

SHARE
இந்த நாட்டில் அரசனாக அல்லாது ஒரு சிறந்த மனிதனாக இருந்து சேவையாற்ற விரும்புகின்றேன் அத்துடன் நாட்டுக்கு சேவையாற்ற மன்னர் தேவையல்ல சிறந்த மனித நேயமே போதும் என ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன நேற்று (11ஆம் திகதி) தெரிவித்தார்.
புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள மைத்திரிபால சிறிசேன நேற்று கண்டி ஸ்ரீதலதா மாளிகையின் எண்கோண மண்டபத்திலிருந்து நாட்டு மக்களுக்கு தம் உரையை நிகழ்த்தும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இந் நாட்டின் சேவகனாக தெரிவு செய்ய ஜனாதிபதி தேர்தலில் எனக்கு வாக்களித்த சகல மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன். மேலும் இந்த தேர்தல் வெற்றி உங்களுடையது. எனவே யாருக்கும் இடையூறு ஏற்படாத வகையில் கொண்டாட வேண்டும்.

இதேவேளை நாட்டில் மனித நேயம், நீதி, ஆகியவற்றை நிலைநாட்ட கூடிய நல்லாட்சியை ஏற்படுத்துவேன். நாட்டை அபிவிருத்தியில் இட்டுச் செல்ல பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவபடுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் எமது தேசிய அராங்கத்தில் இணைந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

எமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி நாட்டின் ஆட்சியை முன்னெடுக்க வேண்டும். இதற்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இதேவேளை அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், வறுமை நிலையை போக்கவும் ஒவ்வொருவரின் வாழ்க்கையில் அபிவிருத்தி ஏற்படவும் முதல் கட்ட நடவடிக்கையை எடுப்பேன்.

அத்துடன் நான் போட்டியிட்ட முதலாவது ஜனாதிபதித் தேர்தலும் இறுதி ஜனாதிபதித் தேர்தலும் இதுவாகும். எமது அரசின் முதலாவது நடவடிக்கையாக இந்த வறுமை நிலையை நீக்கி மக்களின் பொருளாதார நிலைமையை ஸ்தீரப்படுத்த தேவையான முன்னெடுப்புக்களை எடுக்கவுள்ளோம்.

நிறைவேற்று ஜனாதிபதியிடம் உள்ள மிகைத்த அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும், அமைச்சரவையிடமும், நீதிமன்றத்திடமும், சுயாதீன ஆணைக்குழுக்களிடமும், அரச துறையினரிடமும் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: