9 Jan 2015

கூட்டமைப்புடன் புதிய ஜனாதிபதி இணைந்து செயற்பட வேண்டும்: இந்திரகுமார்.

SHARE
(த.லோகதக்சன்)

எமது நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தினையும் மதித்து எமது தேசியத்தின் உரிமைக்காகவும் காலத்தின் தேவை அறிந்து எதிரணி பொது வேட்பாளருக்கு வாக்குகளை மாரி மழை பொழிந்ததைப் போன்று அள்ளி வழங்கியதை இட்டு பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.


நாம் தன்மானமுள்ள தமிழ் மக்கள் தான் என்பதை எமது தமிழ் மக்கள் மீண்டும் நிரூபித்துள்ளனர். வடக்கு கிழக்கு வாழ் தன்மானத் தமிழர்களுக்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பும் நானும் என்றென்றும் தலைவணங்குபவனாகவும், நன்றிக்குரியவர்களாகவும் இருப்போம் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார்.

ஜனாதிதித் தேர்தலின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுமல்லாது வடக்கு கிழக்கு பகுதியில் தமிழ் மக்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் பொது எதிரணி வேட்பாளரை வெற்றிபெறச் செய்தமைக்காக நன்றி தெரிவித்தே அவர் இவ்வாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்…!

இந்த நாட்டில் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வந்தமை என்ற பேரில் எமது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களை கொன்று குவித்த இந்த மஹிந்த அரசாங்கத்தினை விரட்டியடிக்க வேண்டும் என்பதற்காக இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாக களமிறங்கிய போதும் தாமதமாக எமது அறிவிப்பை விடுத்திருந்தும் காலத்தின் தேவை கருதி எமது மக்களும் மாற்றத்தினை நோக்கி அவர்களின் சிந்தனையை வெளிப்படுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கையை இந்த நாடு அறியவும் தெரியப்படுத்தி தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான மற்றுமொரு ஆணையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கியிருப்பதையும் இட்டு பெருமிதம் கொள்கின்றேன்.

எமது தமிழ் மக்கள் மத்தியில் எத்தனையோ போலிப் பிரச்சாரங்கள் எத்தனை எத்தனையோ சலுகைகள் கொடுத்து அபிவிருத்தி அபிவிருத்தி என்று சொல்லி அவர்களை ஏமாற்றி வந்த இந்த மஹிந்த அரசாங்கத்திற்கும் அவருடன் இருந்த அடிவருடிகளுக்கு பாரிய பாடம் இன்று புகட்டப்பட்டுள்ளது.

எமது மக்களுக்கு தேவை சலுகை அரசியல் அல்ல கொள்கை அரசியலே என்பதை இந்த நாடும் இந்த உலகமும் இந்நாட்டின் பொரும்பாண்மை அரசியல்வாதிகளும் புரிந்து கொள்ள வேண்டும். எமது மக்கள் என்றென்றும் சோரம் போகாதவர்கள் ஒரு சில தேசியத்தைக் காட்டிக் கொடுத்தவர்களை வைத்து எமது மக்களை தீர்மானித்திருந்த இந்த அரசாங்கத்திற்கு எமது மக்கள் கொடுத்த பாரிய இடியே இந்த தேர்தல் முடிவு.

இன்று இந்த முழு உலகமுமே அறிந்திருக்கும் இந்த நாட்டில் வடக்கு கிழக்கு மக்களின் வாக்குப் பலத்தினை. இன்று இந்த நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் பாரிய சக்தியாக எமது வடக்கு கிழக்கு மக்களின் வாக்குப் பலம் தங்கியிருக்கின்றது. இதனை புதிய ஜனாதிபதி அவர்களும் உணர்ந்தே செயற்படுவார் என நம்புகின்றோம். ஏனெனில் நாட்டில் ஏனைய பகுதிகளை விட எமது வடக்கு கிழக்கு பகுதிகளினால் தான் வெற்றி நிச்சயிக்கப்ட்டுள்ளது என்பதுடன் இது தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அதன் கொள்கைக்கும் கிடைத்த வெற்றி.

இந்த வெற்றியின் மூலம் எமது தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும் பாரிய அச்சுறுத்தல்களுக்குள் வாழும் எமது இளைஞர் சமுதாயத்திற்கு ஒரு விடிவு கிட்டும் எமது உரிமைகள் தொடர்பில் ஒரு சிறந்த தீர்வு பெறப்பட வேண்டும் என்ற எண்ணமே எம் அனைவர் மத்தியிலும் இருக்கின்றது. தமிழர்கள் வாழ்வில் விடியலுக்கான ஓர் ஒளிக்கீற்று தோன்றியிருப்பதாக நாம் நம்புகின்றோம்.

அது மட்டுமல்லாது மாற்றம் பெற்றுள்ள இந்த நாட்டின் புதிய ஜனாதிபதியினூடாக சர்வதேசமும் இந்திய அரசாங்கமும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து தமிழர்களுக்கான உரிய தீர்வினைப் பெற்றுத் தரவேண்டும் எனவும் வலியுறுத்துகின்றேன்.

எனவே எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பால் ஈடுபாடு வைத்து நாம் சொன்னதைக் கேட்டு இந்தத் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் அவர்களுக்கு வாக்களித்து மைத்திரிபால சிறிசேன அவர்களை வெற்றிபெறச் செய்தது மட்டுமல்லாது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை வெற்றி பெறச் செய்த எமது வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு மீண்டும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: