29 Jan 2015

65 வருடகால போராட்ட வரலாற்றில் இலட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த இனமாக தமிழினம் மட்டுமே உள்ளது - அரியம் .எம்.பி

SHARE
தமிழ் மக்களின் பல போராட்டங்கள் மற்றும்  பல தியாகங்களுக்கு மத்தியில் உருவான கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுக்கின்றமை கவலைக்குரிய விடயம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28ஆவது நினைவுதினம் கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் புதன்கிழமை (28) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்

'65 வருடகால போராட்ட வரலாற்றில் இலட்சக்கணக்கான உயிர்களை பறிகொடுத்த இனமாக தமிழினம் மட்டுமே உள்ளது.  இந்தப் போராட்டம் காரணமாக மூவின மக்களும்  மடிந்துள்ளார்கள் என்பதையும்  நாங்கள் மறுக்கவில்லை. ஆயிரத்துக்குட்பட்டவர்களை இஸ்லாமிய சமூகம் இழந்துள்ளதாக  அவர்களின் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்களை பறிகொடுத்தவர்கள் சிங்கள மக்கள். ஆனால் இலட்சக்கணக்கான மக்களை பறிகொடுத்தவர்கள் தமிழ் மக்கள் மட்டுமே.

உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி பணிகளை ஆற்றமுடியாதவாறும் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றோம். கடந்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட எமது மக்களை நினைவுகூரமுடியாதுள்ளோம். அதேபோன்று எமது இனத்துக்காக  ஆகுதியாகிய நாற்பதாயிரம் பேரை நினைவுகூரமுடியாதுள்ளோம்.

65 வருடங்களாக தொடர்ந்து அடிமைகளாக நாங்கள் இருந்துவருகின்றோம். இதற்காக பல்வேறுபட்ட போராட்டங்களை நடத்தி இலட்சக்கணக்கான மக்களை இந்த மண்ணில் ஆகுதியாக்கியுள்ளோம். இந்த வரலாற்றின் பின்னரே கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் நாங்கள் சந்தித்தோம்.

மேலும் உண்மையான சமாதானம் என்பது போராட்டம் இடம்பெற்ற மண்ணில் போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகளை செய்வது மட்டுமல்லாது  அந்தப் போரில்  உயிரிழந்தவர்களை நாங்கள் நினைக்கும்போதே அது உண்மையான சமாதானமாக இருக்கும்.

நாங்கள் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை  ஆதரித்ததன் காரணமாக கிழக்கு மாகாணசபையில் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்தோம். அதன் அடிப்படையில் கிழக்கு மாகாணசபையில் அதிகளவிலான உறுப்பினர்களை கொண்ட கட்சி ஆட்சி அமைப்பதற்கான தகுதியுடைய கட்சி என்ற அடிப்படையில் நாங்கள் முதலமைச்சர் பதவியை  எதிர்பார்க்கின்றோம். இதன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் கன்னியமாகவும் நேர்மையுடனும்  அடிப்படை காரணங்களுடனும் பேச்சுக்களை நடத்தினோம். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதனை ஏற்றுக்கொள்ளாமல் இன்றுவரை தடுத்துக்கொண்டுள்ளது.

போராடி பல மக்களை இழந்த நிலையிலும் இன்றும் முஸ்லிம் மக்களுடன் இணைந்து வாழ நாங்கள் தயாராகவுள்ளோம்.  முதலமைச்சர் பதவியை  தமிழர்களுக்கு தரவேண்டும் என்று கூறியும் கூட அதனை கணக்கில் எடுக்காமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தட்டிக்கழிக்கின்ற நிலையிலுள்ளது' என்றார்.  

SHARE

Author: verified_user

0 Comments: