வானிலை
மாற்றத்தினால் திடீரென ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளப்பெருக்கினால்
பாதிக்கப்பட்டவர்களுக்காக உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் அதிகார சபைகளுக்கு பணிப்புரை
விடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை
நிவாரணங்களை வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, விசேட திட்ட அமைச்சு,
மாவட்ட செயலகங்கள், பாதுகாப்பு படைகளுக்கு விசேட மற்றும் அவசர பணிப்புரை
விடுக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கான உணவு மற்றும்
அத்தியாவசிய பொருட்கள் மாவட்டசெயலகங்களின் உதவியூடாக ஒவ்வொரு பிரதேச
செயலாளர்களினூடாகவும் முப்படைகளின் உதவிகள் மூலமும் வழங்கப்பட்டு வருகிறது
என அனர்த்த முகாமைத்துவ மையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார
தெரிவித்துள்ளார்.
சமைத்த உணவுகள் உலர் உணவுகள் உட்பட பணத்தொகைகளும் ஒவ்வொரு மாவட்ட செயலகங்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார், கண்டி, மாத்தளை, குருநாகல்,
புத்தளம், திருகோணமலை, பொலன்னறுவை, மற்றும் அநுராதபுரத்தைச் சேர்ந்த 7,491
குடும்பங்களைச் சேர்ந்த 27,811 பேர் சீரற்ற காலநிலையால்
பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் மாத்தளை, கண்டி, பதுளை, மற்றும்
நுவரெலியா பிரதேசங்களில் மண்சரிவு மற்றும் அபாய சூழ்நிலைகளுக்கான
சந்தர்ப்பம் காணப்படுகின்றமையால் அனைத்து பிரதேச மக்களையும் அவதானமாக
இருக்கும் படி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன (NBRO) அலுவலர்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.
0 Comments:
Post a Comment