30 Nov 2014

மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் படு தோல்வி அடைவார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

SHARE
மைத்திரிபால சிறிசேன இந்த தேர்தலில் படு தோல்வி அடைவார் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
நேற்று ஆரையம்பதி பாலமுனை பிரதேசத்தில் 150 வறிய குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்புக்கான வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
உணர்வுகளாலும் உணர்ச்சிகளாலும் தூண்டப்பட்டு தமிழ் சமூகம் பட்ட துன்பம், துயரம் எமக்கு தெரியும். தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்ப்பு அரசியலை செய்து செய்து தமிழ் மக்களை அதன் மூலம் காயப்படுத்தியுள்ளதை நேரடியாக கண்டிருக்கின்றோம். ஆகையால் நாங்கள் எதிர்ப்பு அரசியலை செய்ய முடியாது நாங்கள் அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அண்மையில் அளுத்கம மற்றும் தர்க்கா நகர் பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரம் மற்றைய இடங்களுக்குச் செல்லாமல் பாதுகாக்கப்பட்டுள்ளதோடு, கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட வீடுகள் மற்றும் பள்ளிவாசல்கள் அரசாங்கத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையெல்லாம் விளங்கிக் கொள்லாமல் நாங்கள் எங்களுடைய சமூகத்திற்காக பேசுகின்ற பொழுது நாங்கள் கருத்துக்களால் விமர்சிக்கப்படுகின்றோம், அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை அதை வரவேற்கின்றோம். ஆனால் அந்த கருத்துக்களின் மூலம் நீங்கள் எங்களுக்கு என்ன சொல்ல வருகின்றீர்கள்? அதனை நீங்கள் தெளிவாக சொல்ல வேண்டும்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு இலட்சம் முஸ்லிம் மக்கள் மட்டும்தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களித்தார்கள். மற்ற அனைத்து முஸ்லிம்களும் சரத் போன்சோகாவுக்குதான் வாக்களித்தார்கள்.
எல்லோரும் சொன்னார்கள் சரத் பொன்சேகா வெல்லப் போகிறார் என்று, ஆனால் அவர் படு தோல்வி அடைந்து கிட்டத்தட்ட 19 இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றார். நம் நாட்டுடைய அரசியலை விளங்கிக் கொள்ள வேண்டும். ஒரு தோற்றுப்போகிற அரசியலுக்கு பின்னால் எங்களுடைய சமூதாயத்தை கொண்டு போக முடியாது.
சில நேரங்களில் நாங்கள் சொல்லுகின்ற நேரம் அதை ஏற்றுக் கொள்வதற்கும் சிலர் ஆயத்தமில்லை. ஆனால் நாங்கள் உண்மையை யதார்த்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாம் தோற்றுப்போகிற அரசியலோடு இணைந்து எங்களுடைய சமூதாயத்தை கொண்டு போக முடியாது என்னதான் பிரச்சினை இருந்தாலும் அந்த பிரச்சினையை தீர்க்கக் கூடிய சக்தியோடுதான் நாங்கள் இருக்க வேண்டும். அதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஆகவே முஸ்லிம்கள் விளங்கிக் கொள்ள வேண்டியது பௌத்த தீவிரவாத அமைப்பு பொது பல சேனாவுடன் எங்களுக்கு நிறைய பிரச்சினை இருக்கிறது. நிறைய ஆத்திரத்தோடு முஸ்லிம்கள் இருக்கின்றோம், அவர்களை தோல்வி அடையச் செய்ய வேண்டும், அவர்களை அழிக்க வேண்டும் என்றுதான் நாம் இருக்கின்றோம்.
அவர்களை அழிக்கப்போகிறோம். தோல்வி அடையச் செய்யப்போகின்றோம் என்று கூறி நம் சமுதாயத்தை இதை விட மோசமான நிலமைக்கு தள்ளி விட முடியாது. எங்களுடைய சமூகத்திற்கு சரியான தலைமைத்துவத்தையும், வழிகாட்டலையும் காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ என்ற அந்த அலையிலே முஸ்லிம் சமூதாயம் பாதுகாக்கப்பட்டாக வேண்டும்.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மஹிந்த ராஜபக்ஷவினுடைய வெற்றியிலே முஸ்லிம் சமூதாயம் கணிசமான பங்களிப்பு செய்தது என்ற அந்த செய்திதான் இந்த முஸ்லிகளை மாத்திரமல்ல வட- கிழக்குக்கு வெளியிலே மலைகளிலும், குன்றுகளிலும், கிராமங்களிலும் வாழுகின்ற அந்த இலட்சக்கணக்கான முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பு வழங்கப் போகின்றது.
நாங்கள் எங்களுடைய சமூகத்திற்கு உணர்வுகள், உணர்ச்சிகளால் இன்னுமொரு அழிவை ஏற்படுத்தி விடக்கூடாது அதனை நீங்கள் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஜனவரி 8 ஆம் திகதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கு பிறகு இந்த முஸ்லிம்கள்தான் முழு இலங்கையிலும் வாழுகின்ற முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதி செய்த சமுதாயம் என்கின்ற செய்தியை கொடுக்குகின்றவர்களாக நீங்கள் மாற வேண்டும், அது வரையிலும் நாங்கள் விமர்சிக்கப்பட்டுக் கொண்டுதான் இருப்போம் என பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: