29 Nov 2014

கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மூன்றாவது, சர்வதேச ஆராய்ச்சி மகாநாடு

SHARE
மூன்றாவது, சர்வதேச ஆராய்ச்சி மகாநாடு டிசெம்பெர் 4, 5 ஆம் திகதிகளில் கிழக்குப் பல்கலைக் கழகத்தில்  நடாத்தப்படவுள்ளதாக கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் கலாநிதி கிட்ணன் கோபிந்தராஜா தெரிவித்தார்.

இது தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை (28) மாலை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இத்தகவல்களை வெளியிட்டார்.

இவ்வருட சர்வதேச ஆராய்ச்சி மகாநாட்டுக்;காக 'புதுமையாக்கம் ஊடாக நிலைத்திருக்கும் அபிவிருத்தி'(Sustainable Development through Innovations) எனும் கருப்பொருள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இம்மகாநாடு தேசிய, சர்வதேச மட்டத்திலுள்ள அறிவியலாளர்கள், புலமையாளர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள் தமது ஆராய்ச்சி முடிவுகளை அரங்கப்படுத்துவதற்கு களத்தினை அமைத்துக் கொடுத்திருப்பதுடன், இவ்வாறான புலமைசார் ஆராய்ச்சியின் மூலம் கிழக்குப் பல்கலைக்கழகம் தொடர்ந்தும் தேசிய அபிவிருத்திக்கும், பிராந்தியத்தின் அபிவிருத்திக்கும் தனது பங்களிப்பினை நீடித்துக் கொண்டுள்ளது என்றும் கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் தெரிவித்தார்.

விவசாயம் மற்றும் உணவு ஊட்டச்சத்து, பிரயோக விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், வியாபாரம் மற்றும் தொழிற்றுறை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்;, மருத்துவம், மனிதநலன் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்கள் தமது ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும்படி தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில்; ஏற்கெனவே கோரப்பட்டதற்கிணங்க சமர்ப்பிக்கப்பட்டவற்றில் சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகள் துறைசார்ந்த மதிப்பீட்டுக் குழுவினரால் அளிக்கை செய்வதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிணங்க விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து தொடர்பாக இருபத்தியொரு ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வாளர்களால் சமர்பிக்கப்பட்டன.
இவற்றில் பதினைந்து ஆராய்ச்சிக் கட்டுரைகள் அளிக்கை செய்வதற்கு தகுதியுடயவைகள் என சிபார்சு செய்யப்பட்டுள்ளன.
பிரயோகவிஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட ஆறு ஆய்வுக் கட்டுரைகளில் மூன்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வியாபாரம் மற்றும் தொழிற்துறை சார்ந்து சமர்ப்பிக்கப்பட்ட 12 ஆய்வுக் கட்டுரைகளில் 7 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
மருத்துவம் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்ட 19 ஆய்வுக் கட்டுரைகளில் 9 ஆராய்ச்சிக் கட்டுரைகள் அளிக்கை செய்வதற்கு சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

மனிதநலன் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் சார்பாக 84 ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வாளர்களால் சமர்பிக்கப்பட்டன. இவற்றில் 42 கட்டுரைகள் மதிப்பீட்டுக் குழுவினரால் அளிக்கை செய்வதற்கு தகுதியுடயவைகள் என சிபார்சு செய்யப்பட்டுள்ளன.

மேலும், மனிதநலன் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் தொடர்பாக கல்வி, மெய்யியல், புவியியல், அரசியல் விஞ்ஞானம், நுண்கலை, பொருளியல், மொழி, நாடகமும் அரங்கியலும், சமூகவியல், வரலாறு ஆகிய துறைசார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் ஆய்வரங்கில் அளிக்கை செய்யப்படவுள்ளதாகவும் கிழக்குப் பல்கலைக் கழக உபவேந்தர் தெரிவித்தார்.

இவ்வாய்வுக் கட்டுரைகள் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்டுள்ளதுடன், துறைசார்ந்து நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவுகளை முன்னிலைப்படுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.

இம் மகாநாட்டுக்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் இருளாண்டி முத்தையா, நாட்டுப்புறவியல் துறை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

பிரதான உரையினை மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் துறை தகைசால் பேராசிரியர் (Emeritus) தயானந்த எஸ். விஜயசேகர, நிகழ்த்தவுள்ளார்.
SHARE

Author: verified_user

0 Comments: