29 Nov 2014

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை இன்று குறைந்துள்ளது

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி தொடக்கம் இன்று சனிக்கிழமை(29) காலை 8.30 மணி வரை 1354.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி எம்.சூரியகுமார் தெரிவித்தார்.

கடந்த 19.11.2014 திகதி தொடக்கம் இன்று சனிக்கிழமை காலை வரை 392.3 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை இன்று(29) குறைந்துள்ளதுடன் காலநிலையும்  சீராகியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ச்சியாக பெய்த மழையால் மாவட்டத்தின் தாழ் நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

எனினும் வெள்ள அனர்த்தத்தால் குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாக இதுவரை எந்தவொரு அறிக்கையும் மாவட்டத்தில் பதிவாகவில்லையென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு முகத்துவாரம், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸின் வேண்டுகோளின் பேரில் வெட்டப்பட்டு வெள்ள நீர், கடலுக்கு ஓடச் செய்யப்பட்டதையடுத்து வெள்ளம் குறைந்துள்ளதாகவும் எஸ்.இன்பராஜன் மேலும் தெரிவித்தார்.
SHARE

Author: verified_user

0 Comments: