18 Feb 2025

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் கிடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பு

SHARE

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் கிடுதலைப் புலிகள் கட்சி பகிரங்க அழைப்பு.

அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும். 

ஆகவே அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுக்கின்றது. 

என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை(18.02.2025) மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது கட்சிக் காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இதன் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.... 

நாட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தல் உள்ளுராட்சி மன்ற தேர்தலாகும். உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படுவது தொடர்பாகவும் அதை அதில் போட்டியிடுவதற்காகவும் பல அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும், முண்டியடித்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்களும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். 

மிக நீண்ட காலத்துக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெற இருக்கின்றது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது, எமது பிரதேசத்தை நாங்களே ஆளுகின்ற அதிகாரத்தின் பெறுகின்ற தேர்தலாகும். ஜனாதிபதி தேர்தலில் போன்று அல்லது பாராளுமன்றத் தேர்தலை போன்று அல்லாமல் உள்ளுர் தலைவர்களை வலுவாக்கி உள்ளுரில் இருக்கின்ற வளங்களை பயன்படுத்தி இருக்கின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற தேர்தலாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இருக்கின்றது. 

2008 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் அனைத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் கையகப்படுத்தி இருந்தது. அந்த அடிப்படையில் இன்று வரையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்கள் செயல்படுவதற்கு வருமான முளைக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்து கொடுத்தது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஆட்சிக் காலமாகும். 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற ஆட்சிக்காலத்தில் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. நூலகங்கள், உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டடங்கள், வீதியபிருத்தி, உள்ளிட்ட பல அபிவிருத்தி செயல்பாடுகளை முன்னெடுத்தது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சிக்காலத்தில் ஆகும். 

அதன் பின்னர் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் கையகப்படுத்திய தமிழரசு கட்சி மற்றும் அதனோடு இணைந்த கட்சிகள் எவ்வாறு ஆட்சிகளை நடத்தினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். பட்டிப்ளை, வவுணதீவு, போரதீவுப்பற்று, போன்ற பல பிரதேசங்களில்கூட வீதிகளில் மின் விளக்குகளைகூட பொருத்த முடியாத அளவிற்கு அந்த உள்ளுராட்சி மன்றங்களின் நிர்வாக செயல்பாடுகள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமலும் போயிருந்தது. 

பாராளுமன்றத் தேர்தலுடன் அல்லது ஜனாதிபதி தேர்தலுடனும் ஒப்பிட்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பார்ப்பதற்கு, அப்பால் உள்ளுர் அதிகாரங்களை எவ்வாறு கையகப்படுத்த முடியும் என்பதை பார்க்க வேண்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அளப்பரிய சேவைகளை ஆற்றி இருந்த போதும் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து இன்று வாக்குகளை பெற்ற அரசியல் தலைவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள். 

குறிப்பாக 93 நாட்கள் கடந்தும் எவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. மைலத்தைமடு பிரச்சினைகள் தீர்க்க போகின்றோம், அதேபோன்று ஏனைய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து தீர்த்து வைப்போம், என்று கூறியவர்கள் இன்று என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள். குளத்துக்குள் விளையாட்டு மைதானத்தை தேடிக் கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான போலியான கருத்துக்களுக்கு பின்னால் செல்லாமல் மிகத் தீர்க்கமான முடிவுகளை எடுத்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பின்னால் மக்கள் அணிதிரள்வார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. 

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை பொறுத்த வரையில் கிழக்கு மாகாணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் உள்ளுர் தலைவர்களை பாதுகாக்க வேண்டும், என நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அந்த அடிப்படையில் கிளக்கு மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றது. 

உள்ளுராட்சி மன்ற அதிகாரம் என்பது மிக மிக முக்கியமான தேவைபாடான அதிகாரமாக இருக்கின்றது. நாளாந்தம் கபளீகரம் செய்யப்படுகின்ற நிலங்களை பாதுகாப்பதற்கும், நிர்வாகங்களை பாதுகாப்பதற்கும், மிக முக்கியமாக இருக்கின்றது. ஆகவே எனது சமூகம் எதிர்காலத்தில் தலை நிமிர்ந்து வாழ வேண்டுமாக இருந்தால் உள்ளுர் ஆட்சி அதிகாரங்களை கையகப்படுத்தி படுத்த வேண்டும். 

அந்த அடிப்படையில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் ஒரே கூரையின் கீழ் பயணித்து கிழக்கு மாகாணம் பூராகவும் தமிழர்களின் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையகப்படுத்துவதற்காக முன்வர வேண்டும்.

ஆகவே அனைத்து கட்சிகளும் ஒன்றாக ஒரே கூரையின் கீழ் நடைபெற இருக்கின்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி கிழக்கு மாகாணம் பூராகவும் நிச்சயமாக இளம் வேட்பாளர்களை துடிப்புள்ள வேட்பாளர்களை எம் சமூக ஆர்வலர்களையும் இம்முறை உள்ளுராட்சி மன்றத்தில் அதிகமான ஆசனங்களை கையகப்படுத்தும் என நாம் எதிர்பார்க்கின்றோம். எனவே அனைவரும் வாருங்கள் ஒன்றாக இணைந்து எமது பிரதேசங்களை கிழக்கு மாகாணத்தையும் பாதுகாப்போம் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

 



SHARE

Author: verified_user

0 Comments: