18 Feb 2025

தூய்மையான இலங்கை (Clean Srilanka) திட்டமும்/பேடன்பவல் தினமும்.

SHARE

தூய்மையான இலங்கை (Clean Srilanka) திட்டமும்/பேடன்பவல் தினமும்.

இலங்கை அரசின் “தூய்மையான இலங்கை (Clean Srilanka) திட்டத்தின் கீழ் புகையிரத நிலையங்களை “அழகுபடுத்தலும் பராமரித்தலும் வேலைத் திட்டம் இலங்கை தேசிய சாரண சங்கத்திடம் இலங்கை அரசினால்  ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

இதனடிப்படையில் மாவட்டங்கள் தோறும் உள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் செயற்பாடுகள் நடைபெறவுள்ளன. குறித்த புகையிரத நிலையங்கள் அமைந்துள்ள மாவட்ட சாரண சங்கங்களிடம் மேற்படி வேலைத்திட்டம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன. 

இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள புகையிரத நிலையங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தை திட்டமிட்டு வருகிறது. இச்செயற்றிட்டம் பதில் மாவட்ட ஆணையாளரும் பிரதிப் பிரதம ஆணையாளருமான (நிதி) அமிதன் கார்மேகம் தலமையில் இடம்பெறவுள்ளன. 

இதன் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கம் மட்டக்களப்பு மாவட்ட பதில் மாவட்ட சாரண ஆணையாளரின் பணிப்புரைக்கு அமைய  மட்டக்களப்பு புகையிரத நிலைய அதிபரை சந்தித்து கலந்துரையாடியுள்ளது. இச்சந்திப்பில் சாரண தலமையக ஆணையாளர் பொ.சசிகுமார், அ.நிசாந்தன், உதவி மாவட்ட ஆணையாளர் (நிகழ்ச்சி) ஆ.புட்கரன், உதவி மாவட்ட ஆணையாளர் (பயிற்சி) சிவாஜினி ஜெயராஜ் உதவி மாவட்ட ஆணையாளர் (நிருவாகம்) ம.சந்திரசுசர்மன், உதவி மாவட்ட ஆணையாளர் (மட்டு வலயம்) பி.ஜோன், உதவி மாவட்ட ஆணையாளர் (மட்டு மத்தி)  ப.தினேஸ் உதவி மாவட்ட ஆணையாளர் (நிதி)  ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னுரிமை அடிப்படையில் செய்யப்பட வேண்டிய வேலைகள்  இணங்காணப்பட்டு பட்டியல் படுத்தப்பட்டன. கழிவுகளை அப்புறப்படுத்தல், சூழலை அழகுபடுத்தல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், இதற்காக பதாகைகளை காட்சிப்படுத்தல், மரம் நடுதல், போன்ற விடயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு செயற்படுத்தப்படவுள்ளன. இதற்காக மட்டக்களப்பு மாநகரசபை, மாவட்டத்தில் உள்ள பிரதேச சபைகள், பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்பைக் கோருவது, எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன. 

மாவட்டத்தில் உள்ள ஐந்து வலயங்களிலும் இருந்து சாரணர்களும் சாரண தலைவர்களும் இதில் தமது பங்களிப்பை வழங்கவுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்துடன் இணைந்து அக்கரைப்பற்று கல்முனை மாவட்ட சாரணசங்கமும்  செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

எதிர்வரும் 22 ஆம் திகதி சாரணியத்தின் தந்தை என அழைக்கப்படும் “லோட் பேடன் பவல் பிரபு அவர்களின் நினைவு தினத்துடன்  “தூய்மையான இலங்கை (Clean Srilanka) வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது மட்டு நகரின் மத்தியில் அமைந்துள்ள தண்ணீர் ஊற்றுப்பூங்காவில் சாரணர்கள் ஒன்றுகூடவுள்ளனர். பின்னர் அங்குள்ள  சாரண சிலைக்கு கழுத்துக்குட்டை அணிவிக்கப்படும் இதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள நிகழ்வுகளுடன் அங்கிருந்து பொதுமக்களை விழிப்புணர்வுட்டும் வகையில் நடைபவனி இடம்பெறும். நடைபவனியாக வரும் சாரணர்கள் புகையிரத நிலையத்தை அடைந்ததும் உத்தியோக பூர்வ நிகழ்வுகள் பதில் மாவட்ட ஆணையாளரினால் ஆரம்பித்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





SHARE

Author: verified_user

0 Comments: