24 Sept 2024

சுயநிர்ணைய உரிமையுடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை ஜனாதிபதி கொண்டு வருவாராக இருந்தால் தமிழ் மக்கள் அவருடன் கைகோப்பார்கள் - ஜனா எம்.பி.

SHARE

சுயநிர்ணைய உரிமையுடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை ஜனாதிபதி கொண்டு வருவாராக இருந்தால் தமிழ் மக்கள்   அவருடன் கைகோப்பார்கள் - ஜனா எம்.பி.

வடகிழக்கில் தமிழர்கள் சுயநிர்ணைய உரிமையுடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை கொண்டுவருவாக இருந்தால் கடந்த காலங்களை மறந்து தமிழ் மக்கள் புதிய ஜனாதிபதியுடன் பிரச்சனையை தீர்ப்பதற்கு கைகோப்பார்கள். ஏனெனில் அவரும் இந்த நாட்டு மக்களது விடுதலைக்காக போராடியவர். நாங்களும் எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காக போராடியவர்கள். அந்த விதத்தில் சிந்தித்து அவர் செயல்பட வேண்டும். என்பது எங்களுடைய கோரிக்கையும் ஆகும். 

என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய பொதுக் கட்டமைன் கீழ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் அவர்களின் மட்டக்களப்பு அம்பிளாந்துறையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை(23.09.2024 இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் 

தமிழ் பொது கட்டமைப்பின் கீழ் போட்டியிட்ட எமது வேட்பாளருக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் அனைத்தும் தமிழ் மக்களது கோரிக்கைக்கு தமிழ் மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தி இந்த தேர்தலின் எமக்கு கிடைத்த வெற்றியாகவே நாம் பார்க்கின்றோம். 

2001 இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாவதற்கு முன்பு முரண்பட்டிருந்த ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுக்கு அரசியல் குரலாக ஒரே சக்தி இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகியது. 2009க்கு பின்னர் இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்களிடையே பாரிய சிதைவும் உடைவுகளும் ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில் 2009க்கு பின்னர் 15 வருடங்களுக்குப் பின் மீண்டும் ஒருமுறை தமிழ் சக்திகள் தமிழ் மக்களுடையே இணைந்து ஒரு ஒற்றுமையான தமிழ் மக்களது கோரிக்கைகளை தமிழ் மக்களது அரசியல் அபிலாசைகளை வெளியுலகுக்கு ஒரே குரலாக கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் இந்த தேர்தலிலே நாங்கள் இறங்கி இருந்தோம் அதற்கான பதிலையும் நாங்கள் தற்போது பெற்றிருக்கின்றோம். 

எனவே எதிர்வரும் காலங்களில் நாங்கள் குறிப்பாக கிழக்கு மாகாண தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்காக தொடர்ந்து இவ்வாறு ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவையில் நாங்கள் இருக்கின்றோம். இந்த கூட்டுக்கு எதிராக சிங்கள பெரும்பான்மை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவி செய்த சக்திகளும், தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்றார்கள். அவர்கள் கூட எதிர்காலத்திலே தமிழ் மக்களின் நிலைமை கருதி தங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்தலுக்குப் பின்புகூட அவர்களது கருத்துக்கள் தமிழ் தேசியத்துக்கு எதிராக தமிழ் மக்களது ஒற்றுமைக்கு எதிராக இருப்பது உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயமாகும். 

அந்த வகையில் நாங்கள் தமிழ் மக்களது உரிமைகளை எங்களது இருப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு இணைந்த வடகிழக்கிலே தமிழர்கள் சுயாட்சியுடன், சுய நிர்ணய உரிமைகளைப் பெற்று வாழ்வதற்கு நாங்கள் ஒன்றாக பயணிக்க வேண்டும். தற்போது ஒன்பதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் அனுர குமார திசநாயக்க அவர்கள் இந்த நாட்டு மக்களின் விடுதலைக்காக அதாவது ஊழல் வாதிகளிடமிருந்து தங்களது குடும்ப ஆட்சிகளில் இருந்தும் இந்த நாட்டும் நாட்டு மக்களும் விடுபட வேண்டும் என்றும் நீண்ட காலமாக போராடிய ஒரு போராளி. 

அவரைப் போன்றுதான் வடகிழக்கு மக்களும் தங்களது விடுதலையை தாங்கள் சுய நிர்ணய உரிமை உடன் தங்களுடைய பிரதேசத்திலேயே வாழ வேண்டும் என்று அரசியல் ரீதியாக, ஆயுத ரீதியாக, ஜனநாயக ரீதியாக, ராஜதந்திர ரீதியாக, தொடர்ச்சியாக போராடிக் கொண்டு வருகின்றோம். இந்த மக்களின் விடுதலையை நன்கு உணர்ந்தவர் கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற போராட்டங்கள் இருந்தாலும், அரசியல் தீர்வு சம்பந்தமான விடையங்களிலும், எதிரான முரண்பட்ட கருத்துக்களை தெரிவித்தவர்.  தற்போது இந்த நாட்டின் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்.

 ஜனாதிபதியாக ஏற்கனவே வந்தவர்கள்கூட தாங்கள் கடந்த காலங்களிலே நடந்தவற்றை மறந்து ஜனாதிபதி என்கின்ற அரியாசனத்திலே உட்காரும்போது ஒரு பொதுவான நிலைப்பாடு எடுத்த வரலாறு இருக்கின்றன. குறிப்பாக சொல்லப்போனால் ரணசிங்க பிரமதாஸ அவர்கள் 1983 ஆம் ஆண்டு இன அழிப்பிலே ஒரு முக்கிய ஆளாக திகழ்ந்தவர் அவர்கூட 1988, 1989 களில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது முதன்முதலாக 1956 ஆம் ஆண்டு எஸ்.டபிள்யூ.பண்டாரநாயக்கா அவர்களின் கொண்டுவரப்பட்ட ஸ்ரீ சட்டமூலத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள் உரத்து குரல் கொடுத்திருந்தார்கள். அதுக்கு எதிராக போராட்டங்களும் நடைபெற்றிருந்தன. 

தமிழர்களின் முதுகிலே ஸ்ரீ எழுத்து பொறிக்கப்பட்ட வரலாறுகள் இருந்தும் தான் ஜனாதிபதி என்கின்ற அந்த உயரிய அதிகாரத்தை பயன்படுத்தி அந்த ஸ்ரீ யை இல்லாமல் ஆக்கினார். போன்றுதான் இந்த ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடம் வினயமாக கேட்டுக்கொள்வது என்னவெனில் தற்போது தமிழ் மக்கள் எங்களது பிரச்சனைகளை மீண்டும் ஒருமுறை எடுத்துறைப்பதற்காக ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி கணிசமான வாக்குகளை பெற்றிருக்கின்றோம். இந்த ஒரு நிலைமை எதிர்காலத்திலே வராமல் இருக்க வேண்டுமாக இருந்தால் ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டில் அனைத்து மக்களும் சமமானவர்கள் என்பது உணர்ந்து எங்களுடைய இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை கொடுக்க வேண்டும். இதனை அவர் தன்னுடைய காலத்திலேயே செய்வாராக இருந்தால் உண்மையிலே அது வரவேற்கத்தக்க ஒரு விடயமாக கருதப்படும். 

அதேபோன்று வடகிழக்கில் தமிழர்கள் சுயநிர்ணைய உரிமையுடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வை அவர் கொண்டுவருவாக இருந்தால் கடந்த காலங்களை மறந்து தமிழ் மக்கள் அவருடன் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு கைகோப்பார்கள். ஏனெனில் அவரும் இந்த நாட்டு மக்களது விடுதலைக்காக போராடியவர் நாங்களும் எங்களுடைய மக்களுடைய விடுதலைக்காக போராடியவர்கள் அந்த விதத்தில் சிந்தித்து அவர் செயல்பட வேண்டும் என்பது எங்களுடைய கோரிக்கையும் ஆகும். என அவர் இதன்போது தெரிவித்தார்.






SHARE

Author: verified_user

0 Comments: