8 Jul 2024

பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் - கருணா அம்மான்.

SHARE

பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் - கருணா அம்மான்.

ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படா விட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க தீர்மானித்துள்ளனர் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஞாயிற்றுக்கிழமை(07.07.2024) தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் ஏற்பாட்டில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  

இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டன. கடந்த கால யுத்த அனர்த்தங்களின் போது பின்தங்கிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கி இதன்போது உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் போராளிகளுக்கு உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் கிழக்கு மாகாணத்திற்கான பிரதான நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக்காரியாலயத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உபதலைவர் ஜெயா.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது முன்னாள் போராளிகள் 100பேருக்கு தமது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 10 இலட்சம் ரூபா நிதி பகிர்ந்தளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் செயலாளர் செந்தூரன் உட்பட கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்கள், முன்னாள் போராளிகள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்

இதன்போது கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

ஜனாதிபதியின் தனிப்பட்ட திறமையினை பாராட்ட வேண்டும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தினை நீடிப்பதற்கு அரசியல் யாப்பில் உள்ள விடயத்தினை ஜனாதிபதி கோரியிருப்பதானது சிறந்த விடயமாக பார்க்கின்றேன். இந்த நாட்டில் வரிசை யுகம் இருந்தபோது அதனை குறுகிய காலத்தில் வழமைக்கு கொண்டுவந்த ஒரு திறமையானவர்தான் இன்றைய ஜனாதிபதி.

அவ்வாறு ஒரு தேர்தல் நடைபெற்றாலும் வடகிழக்கில் உள்ள தமிழ் முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள். அவரினால்தான் இன்று சர்வதேச சமூகம் பல உதவிகளை வழங்கியுள்ளன.

ஜனாதிபதியின் பதவி நீடிக்கப்படாவிட்டாலும் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் ரணில் அவர்களையே ஆதரிக்க தீர்மானித்துள்ளனர்.

சம்மந்தன் ஐயாவை நாம் என்றும் மறக்க முடியாது தமிழர்களின் உரிமையை வென்றெடுப்பதற்காக தள்ளாடும் வயதிலும் நின்று குரல் கொடுத்த ஓர் மாமனிதன் அவர். அவருக்கு எமது கட்சி சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அவருடைய இறப்பு மாபெரும் இழப்பாகும். பாராளுமன்றத்திலே நபன் இருக்கும்போது என்னுடன் மிகவும் அன்பாக கதைப்பார்.

தற்போது தமிழர்களின்  எதிர்கால உரிமையை காப்பாற்றுவதற்காக உருவாகிய கட்சிதான்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி. ஏனெனில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள்ளே பதவிக்கு போட்டி நடக்கின்றது. சுமந்திரன் ஒருப்பக்கம் சிறிதரன் மறுபக்கம் என பதவிக்காக வழக்கும் வைத்திருக்கின்றார்கள். இதுவைரகாலமும் ஒரு தூணிலேதான் அந்த கட்சி நின்றது அதுதான் சம்மந்தன் ஐயா. அந்த தூண் சாய்ந்து விட்டது. ஆகவே அக்கட்சி சிதறுவதற்கு வாய்பிருக்கின்றது. அதனால்தான் நாங்கள் அனைத்து கட்சிகளையும் எங்களுடன் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

                         





SHARE

Author: verified_user

0 Comments: