மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின்
தவிசாளர் அச்சுறுத்துவதாக அதே பிரதேச சபை உறுப்பினர் சந்திரகுமார் தெரிவிப்பு.
வீதிகளில் உள்ள மின் குமிழ்களை நான் திருடியதாக மண்முனை தென் எருவில் பற்று களுதாவளை பிரதேசசபையின் தவிசாளரினால் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு ஆதரவு வழங்கவில்லை என்பதனால் தவிசாளர் தொடர்ந்தும் என்னை அச்சுறுத்தி வருவதுடன் தற்பொழுது பொய்யான முறைப்பாடு ஒன்றினையும் பதிவு செய்துள்ளார்.
எனக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்து வருவதுடன் “இருந்த இடமே இல்லாமல் செய்வேன்" என அண்மையில் கொலை மிரட்டலும் விடுத்திருந்தார்.அதேபோல் சக பிரதேச சபை உறுப்பினர் கிருஸ்ணப்பிள்ளை வதனகுமார் மீதும் அம்மையில் பொய்யான முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்திருந்தார்.
என்மீதான பொய்யான முறைப்பாட்டிற்கும் அச்சுறுத்தலுக்கும் காரணம் தற்பொழுது பிரதேச சபை அதிகாரமானது தோல்வியில் சென்று கொண்டிருக்கின்றமையே.
தவிசாளரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் தனது ஊருக்கு அதிக நிதியினை ஒதுக்குதல் போன்ற காரணங்களினால் தவிசாளரால் கொண்டு வரப்படுகின்ற திட்டங்களை சபையில் நிறைவேற்ற முடியாமல் தோல்வியில் முடிவதுடன் மாதாந்த வரவு செலவு திட்டங்களைக்கூட சபையில் நிறைவேற்ற முடியாமல் போகின்றன. இதனால் உறுப்பினர்களை அச்சுறுத்தி தனக்கு அடிபணிய வைக்க முயற்சிக்கின்றார்.
தவிசாளர் நினைத்துவிட்டார் இது வீராவின் காலம் அப்போது ஆயுத முனையில் மற்றவர்களை அச்சுறுத்தியதுபோல் உறுப்பினர்களை அச்சுறுத்தலாம் என்று.
பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இதுவரை எனது வட்டாரத்திற்கு எந்த விதமான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. எமது மக்கள் பழிவாங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பல வீதிகள் இருளில் மூழ்கியுள்ளன. 3, 4 வருடங்களுக்கு முன்னர் பொருத்தப்பட்ட 120க்கு மேற்பட்ட மின்குழிள்கள் ஒளிராமல் உள்ளன.
மின் குமிழ்களை பொருத்தி தரும்படி பல தடவை கோரிக்கை முன்வைத்திருந்தேன். சபையிலும் பல தடவை அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் இதுவரை எந்த மின் குமிழ்களும் பொருத்தப்படவில்லை.
மக்கள் தொடர்ந்தும் என்னிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இரவு நேரங்களில் பல வீதிகளில் மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை காணப்பட்டதுடன் மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட மக்களின் பிரதிநிதி எனும் வகையில் அவற்றுக்கு தீர்வு வழங்க வேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு.
எமது மக்கள் புறக்கணிக்கப்படுவதனால் எமது மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதனால் மின் குமிழ்களை நான் பொருத்துகின்றேன் என ஆளுனருக்கு கடிதம் அனுப்பினேன்.
என்னுடைய செலவில் மின் குமிழ்களை வாங்கினேன். மிக அவசியமான இடங்களில் பொருத்தினேன்.
பகலில் மக்களும் என்னுடன் நின்று மின்குமிழ்களை பொருத்தினார்கள். எனது முகப்புத்தகத்திலும் படங்களை பதிவேற்றினேன்.
பழுதடைந்திருந்த மின்குமிழ்களை பிரதேச சபை செயலாளரிடம் ஒப்படைந்தேன்.
இது நடந்தது 19.08.2025 அன்று ஆனால் தற்போது 7 மாதங்கள் கடந்து நான் மின்குமிழ் திருடியதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த முறைப்பாடுகூட எனது முகப்புத்தகத்தில் உள்ள புகைப்படத்தினை எடுத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒரு கள்ளன் பட்டப்பகலில் மின் குமிழை திருடி தனது முகப்புத்தகத்தில் பதிவிடுவானா? மின்குமிழை திருடுவதற்கும் மாற்றுவதற்கும் வித்தியாசம் தெரியாதவன் எல்லாம் தவிசாளர் வாக்களித்த மக்கள்தான் பாவம்.
என்னால் போடப்பட்ட மின் குமிழ்கள் 7 மாதம் கடந்தும் இன்றும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பிரதேச சபையால் போடப்பட்ட மின் குமிழ்கள் 3 மாதங்கள் முடிய முன்னரே பழுதாகிவிடுகின்றன.
பிரதேச சபை செய்ய வேண்டிய வேலையை எனது பணத்தில் செய்துள்ளேன். உங்களால் மக்களுக்கு சேவை செய்ய முடியவில்லை என்னால் முடிந்தது செய்கிறேன். இதையெல்லாம் களவு என்று பொலிசில் முறைப்பாடு செய்து உங்களுக்கு அடிபணிய வைக்க நினைக்கும் உங்களுக்கெல்லாம் வெட்கம் இல்லையா?
நான் கள்ளனா? மக்கள் சேவகனா? என்பது எனக்கு வாக்களித்த மக்களுக்கும் எனது கிராமத்திற்கும் தெரியும். என மண்முனை; தென் எருவில் பற்று களுதாவளை பிரதேச சபையின் உறுப்பினர் யோ.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
.jpeg)
0 Comments:
Post a Comment