ஒருமித்த குரலில் சமூக அணி திரட்டலுக்கான பயிற்சி நெறிகள்.
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், பிரஜா அபிலாஷ ஆகிய சமூக அமைப்புக்களின் ஏற்பாட்டில் சமூக செயற்பாட்டாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒருங்கிணைந்த 6 மாத காலப் பயிற்சி நெறியின் முதலாவது கட்டத்தின் மூன்று நாள் பயிற்சி நெறி திருகோணமலை சர்வோத மாவட்ட தலைமையக பயிற்சிக் கூடத்தில் இடம்பெற்று ஞாயிற்றுக்கிழமை 11.06.2023 முடிவடைந்தது.
சமகால சமூக நிலைமைகளை ஆய்வு செய்து சிவில் சமூகத்திற்கான நல்லாட்சியை நிலை நிறுத்தும் பொருட்டு சமூக மக்களைப் பலப்படுத்துதல் தொடர்பாக சட்டமும் ஒழுங்கும். மனித உரிமைகள், மக்கள் செயற்பாடுகள், சமூக அணி திரட்டல் உள்ளிட்ட இன்னும் பல உள்ளடக்கங்களைக் கொண்ட பயிற்சி நெறிகள் சமூக மட்ட செயற்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.
இப்பயிற்சி நெறியில் நாடு முழுவதையும் உள்ளடக்கிய விதத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மைச் சமூக செயற்பாட்டாளர்களும் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் மாவட்ட இணைப்பாளர்களுமாக சுமார் 30 பேர் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டு இறுதி வரை நடைபெறவுள்ள இப்பயிற்சி நெறி பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் ஸ்திரப்படுத்தி வாழவைப்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்கள் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக உதவுவதற்கும் இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் அரசினால் நிர்ப்பந்தமாகப் பெறப்பட்ட காணிகளை இழந்ததன் தாக்கத்தினால் உள கலாசார சமூக அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுதற்கும் நிவாரண வழிவகைகள் பற்றிய அறிவூட்டலை மக்களுக்குக் கிடைக்கச் செய்வதற்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாவது கட்டப் பயிற்சி நெறியில் காணி உரிமைகள், சமூகமும் சட்டமும் ஒழுங்கும், சமூக செயற்பாட்டாளர்களின் பாத்திரப் பங்கு ஆகிய விடயதானங்களில் பயிற்சிகள் அளிக்கட்டன.
வளவாளர்களாக கிழக்கு மாகாண முன்னாள் காணி ஆணையாளர் கே. குருநாதன், சட்டத்தரணி சமூக செயற்பாட்டாளருமான பிரஷான்டினி உதயகுமார், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் பயிற்சி இணைப்பாளர்களான பிரியங்கர கொஸ்ரா, பிரான்ஸிஸ் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
0 Comments:
Post a Comment