13 Jun 2023

கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருக்கு எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள் : தனது பயணத்தில் இணைந்து பயணிக்க ஊடகவியலாளர்களை அழைத்த ஆளுநர்.

SHARE

(மாளிகைக்காடு நிருபர்)

கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக ஆளுநருக்கு எடுத்துரைத்த ஊடகவியலாளர்கள் : தனது பயணத்தில் இணைந்து பயணிக்க ஊடகவியலாளர்களை அழைத்த ஆளுநர்.

முஸ்லிங்கள் அதிகமாக வாழும் கிழக்கு மாகாணத்தில் மாகாண அமைச்சுக்கள் எதிலும் ஒரு முஸ்லிம் அமைச்சின் செயலாளர்கள் கூட நியமிக்கப்படாமையும், தேசிய ரீதியாகவும் அமைச்சுக்களின் செயலாளர் பதவியில் முஸ்லிங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளமையும் மக்கள் மத்தியில் கவலையளிப்பதாகவும் சிரேஷ்ட, விசேட தர நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கிழக்கு மாகாண சபையில் இருந்தும் அமைச்சின் செயலாளர்கள் உட்பட பொறுப்புவாய்ந்த பதவிகளில் முஸ்லிங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் பேசும் மக்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகளுக்கு தமிழ் மொழியறிவு அறவே இல்லாமையால் மக்கள் சேவைபெறுவதில் பலத்த அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு சிலோன் மீடியா போரத்தின் பொருளாளர் ஊடகவியலாளர் நூருல் ஹுதா உமர் விளக்கினார்.


கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்குமிடையி லான சிநேகபூர்வ சந்திப்பொன்று திங்கட்கிழமை மாலை அம்பாறை ஆளுநர் விடுதியில் இடம்பெற்றது. இதன்போதே இந்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. மேலும் கருத்து தெரிவித்த அவர், கிழக்கு மீனவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள், மீனவ துறைமுகமின்மையால் அம்பாறை மீனவர்களின் படகுகளை தரித்து நிறுத்துவதில் மீனவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், காணிப்பிரச்சினைகள் உட்பட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து கருத்துக்களை வெளியிட்டார்.

சுதந்திர ஊடகவியலாளர்கள் கலாச்சார அமைப்பின் தலைவர் ஊடகவியலாளர் ஐ.எச்.ஏ. வஹாப் வசதிகுறைந்த, வீடற்ற ஊடகவியலாளர்களுக்கு நட்புறவு நாடுகளின் உதவியைக்கொண்டு வீடுகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறும், மட்டக்களப்பில் நிறுத்தப்பட்டுள்ள புகையிரத பயணத்தை பொத்துவில்- ஹம்பாந்தோட்டை வரை நீடித்து மக்களுக்கு இலகுவான புகையிரத பயணத்தை மேற்கொள்ள உங்கள் சேவைக்காலத்தில் துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநரை கேட்டுக்கொண்டார். மேலும் கிழக்கின் கடல்வளத்தை பயன்படுத்தி ரின்மீன் உற்பத்தி தொழிற்சாலை அமைப்பது தொடர்பிலும், கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டத்தை முன்னெடுக்க வேலைத்திட்டமொன்றை செய்யுமாறும் ஆளுநரை வலியுறுத்தினார்.

இங்கு கருத்து தெரிவித்த நாம் ஊடகர் பேரவை தலைவர் ஊடகவியலாளர் யூ.எல். மப்ரூக் உலகின் தரமிக்க தேயிலையை இலங்கையர்களும் பருகும் வாய்ப்பை கிழக்கு ஆளுநர் உருவாக்கித்தர வேண்டும் என்றும், கிழக்கின் சுற்றுலாத்துறை பற்றிய விளக்கங்களை வழங்கிய அவர் சுற்றுலாத்தளங்களில் பிரசித்தி பெற்ற இடங்களை கொண்டுள்ள கிழக்கில் உயர்ரக தேயிலை விற்பனை நிலையங்களை உருவாக்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் ஊடகவியலாளர்கள் தமது பணியை சிறப்பாக செய்ய அவர்களுக்கு ஊடக உபகரணங்களை பெற உள்ள சிக்கல்களை நீக்கி அவற்றை பெற்றுக்கொடுக்க ஆளுநர் முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நுஜா ஊடக அமைப்பின் தலைவர் எஸ்.எம். அரூஸ் கிழக்கின் ஆளுநர்களில் ஊடகவியலாளர்களை முதன்முதலாக அழைத்து பேசிய புதிய ஆளுநருக்கு நன்றிகளை தெரிவித்ததுடன் தொடர்ந்தும் ஊடகவியலாளர்களுடன் நட்புறவுடன் கூடிய உறவை பேண மக்களின் குறைநிறைகளை அவசரமாக முடிந்தளவில் நிவர்த்திக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

கிழக்கிலுள்ள வளங்களை பயன்படுத்தி கிழக்கை முன்மாதிரியான மாகாணமாக முன்னேற்ற தான் அர்ப்பணிப்புடன் சேவையாற்றவுள்ளதாகவும், சுத்தமான கடற்கரை வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுவருவதாகவும், இன நல்லிணக்க வேலைத்திட்டங்களை அது சார்ந்தவர்களிடம் தான் கையளித்து விட்டு கிழக்கையும், நாட்டையும் முன்னேற்ற தயாராக உள்ளதாகவும், அந்த பயணத்தில் ஊடகவியலாளர்களின் பங்கு அளப்பரியது என்றவகையில் தன்னுடன் இணைந்து ஊடகவியலாளர்கள் பயணிக்க வேண்டும் என்றும், நாட்டின் கடன்சுமை அதிகரித்துள்ள நிலையில் உள்நாட்டு உற்பத்திகளை அதிகரிப்பது தொடர்பில் தான் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளுநர் இந்த சிநேகபூர்வ சந்திப்பின் போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.










SHARE

Author: verified_user

0 Comments: