7 Jun 2023

ஏறாவூர்ப்பற்றில் 1300 மண் அகழ்வு அனுமதிப் பத்திரத்தை 30 ஆகக் குறைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் மண் அகழ்வு நிறுத்தப்படும்

SHARE


ஏறாவூர்ப்பற்றில் 1300 மண் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை 30 ஆகக் குறைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் மண் அகழ்வு நிறுத்தப்படும்இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் மண் அகழ்வுக்காக இதுவரை 1300 அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்தன. ஆயினும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் நோக்கில் சுமார் 1270 மண் அனுமதிப் பத்திரங்களை நீக்கி தற்போது 30 அனுமதிப் பத்திரங்கள் மாத்திரமே வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் இவையும் நீக்கப்படும் என வர்த்தக வாணிப இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.

செங்கலடி குமாரவேலியார் கிராமத்தில் உள்ள தாமரைக் குளத்தருகே திங்களன்று 05.06.2023 இடம்பெற்ற உலக சுற்றுச் சூழல் தினத்தை அனுசரிக்கும் விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார்.

இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் அனுசரணையில் ஏறாவூர்ப் பற்று பிரதேச சபை மற்றும் ஏறாவூர்ப் பற்று பிரதேச செயலகம் ஆகியவற்றினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் கிராம பொது மக்களால் குளத்தருகே கொட்டப்பட்ட பொலித்தீன் பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றப்பட்டதோடு மர நடுகையும் இடம்பெற்து.

மேலும் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு நாடகமும் நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வில் மத்திய சுற்றுச் சூழல் அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் கே. பவாகரன், ஏறாவூர்ப்பற்று பிரதேச சபைச் செயலாளர் வி. பற்குணம், இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் தங்கராஜா திலீப்குமார் பிரதேச செயலக சுற்றுச் சூழல் அலுவலர் எம்.ஐ. ஐயூப், ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலய அதிபர் சுதாகரி மணிவண்ணன், அபிவிருத்தி உத்தியோகத்தர் ரூபா சுகுமாரன் உட்பட இன்னும் பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலே 1300 என்ற எண்ணிக்கையிலிருந்து தற்போது 30 ஆகக் குறைக்கப்பட்டிருக்கும் அனுமதிப்பித்திரங்களைக் கூட அடுத்து வரும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிறுத்தி மண் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதா இல்லையா என்று தீர்மானிப்பதற்கு சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம்.

அதேபோன்று ஏனைய கனிய வள அகழ்வுகளையும் இப்பொழுது நிறுத்தி வருகின்றோம். ஏனென்றால் இதற்கு அனுமதி வழங்கும் பொழுது எங்களுடைய பெயரும் சேர்த்து அடிபடுகிறது. நான் அனுமதி வழங்குவதில்லை. சில திணைக்களங்கள் வழங்கும் பொழுது பிழையான நடவடிக்கைகளால் எங்களுடைய பெயர்களும் களங்கப்படுத்தப்படுகிறது.

இதற்கெல்லாம் அப்பால் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய ஒரு தார்மீகப் பொறுப்பு எமக்கிருக்கின்றது.

சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் அகம் நிறுவனம் அரும்பாடுபட்டு வருகின்றது. அதனை நான் வரவேற்கின்றேன். சுற்றுச்சூழலை சேதப்படுத்துவதிலும் மாசுபடுத்துவதிலும் பொலித்தீன் மிக ஆபத்தானது. 20 பில்லியன் பொலித்தீன் இலங்கையில் பாவனையில் உள்ளது. இது உக்கிப்போவதற்கு 100 வருடங்களுக்கு மேல் ஆகலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆகையினால் இந்த சுற்றுச் சூழல் பேரழிவிலிருந்து நாம் இந்தப் பூமியைப் பாதுகாக்க வேண்டும் என்றார். 















 

SHARE

Author: verified_user

0 Comments: