3 May 2023

ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டு பேச்சுக்கு அழையுங்கள் - பா.உ கோ.கருணாகரம்

SHARE

பொருளாதார நிலையைச் சீர் செய்வதற்காக தமிழ்த் தரப்புகளை ஏமாற்றாமல், ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து விட்டு பேச்சுக்கு அழையுங்கள்… (ஜனாதிபதியின் உரைக்கு பதில் கொடுத்த டெலோ செயலாளர் நாயகம் பா.உ கோ.கருணாகரம்)

பொருளாதார நிலைமையைச் சீர் செய்வதற்காக தமிழ்த் தரப்புகளை ஏமாற்றாமல் நாட்டின் நிலைக்கு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாதமையே முதற் காரணம் என்பதை சிங்களப் பேரினவாதக் கட்சிகளுக்கும், சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறி அவர்களையும் இணைத்து ஒரு தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்திலும், தமிழ் மக்களிடமும் முன்வைத்து விட்டு தமிழ்த் தரப்புகளுடன் பேசினால் நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்குப் பின்னடிக்கவோ, விலகி நிற்கவோ மாட்டோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் ஜனா தெரிவித்தார்.

ஜனாதிபதியின் மேதின உரையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் தமிழ்த் தரப்பு பின்னடிப்பதாகத் தெரிவிக்கப்பட்ட கருத்துக்குப் பதிலளிக்கும் முகமாக நேற்று(02) மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய மேதின உரையிலே இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் இந்த வருட இறுதிக்குள் புறையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு தான் உத்தேசித்துள்ளமை என்றவாறான கருத்தை வெளியிட்டிருந்தார். இதே போன்று தான் கடந்த ஆண்டு சென்ற இலங்கையின் சுதந்திர தினத்திற்கு முன்பதாக இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதாகக் கூறியிருந்தார்.

நேற்றைய அவரது உரையில் மேலும் இந்த ஆண்டுக்குள்ளே இனப்பிரச்சனைக்கான தீர்வைக் காண்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும், தமிழ்த் தரப்புகள், குறிப்பாக தமிழ் கட்சிகள் இந்தத் தீர்வு காணும் விடயத்தைப் பின்னடிப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இவர் சில விடயங்களை அறியாமல் இருந்திருக்க மாட்டார் என நினைக்கின்றேன். போராட்டம் தொடங்கிய காலத்தில் இருந்து ஒருபுறம் ஆயுதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இலங்கையிலே மாறி மாறி ஆண்ட அரச தரப்புடன் தமிழ்த் தரப்பினர் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் கூட மஹிந்த ராஜபக்சவுடன் 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதேபோன்று அதற்குப் பின்னர் வந்த அரசுகளுடன் குறிப்பாக நல்லாட்சி என்று கூறப்படுகின்ற மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும், ஜனாதிபதியையும் விட அதிகாரம் கொண்டவராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் இருந்த அரசாங்கத்திலே பாராளுமன்றத்தை இனப்பரச்சினைக்குத் தீர்வு காணும் சபையாகக் கூட மாற்றி பல கூட்டங்களை நடத்தியும் இறுதியில் அது ஏமாற்றப்பட்டதாகவே அமைந்தது. 

மீண்டும் தற்போது அனைத்து தமிழ் கட்சிகளும் பாராளுமன்றத்தில் தன்னுடன் இணைந்து ஒரு தீர்வைக் காண்பதற்கு முன்வர வேண்டும் என்று கூறுகின்ற ஜனாதிபதி அவர்கள் முதலாவதாக இந்த பொருளாதார நிலைமை இவ்வாறு மாறியதற்கு நாட்டின் இனப்பிரச்சினைதான் முதற் காரணம் என்பதை சிங்களக் கட்சிகளுக்கும், பேரினவாதக் கட்சிகளுக்கும், சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கூறி அவர்களைத் தங்களுடன் இணைத்து இந்த இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண்பதற்கு முயற்சிக்க வேண்டும். அந்த தீர்வுத் திட்டத்தை பாராளுமன்றத்திலும், தமிழ் மக்களிடமும் முன்வைத்து விட்டு தமிழ்த் தரப்புகளுடன் பேசினால் நாங்கள் ஒருபோதும் பேச்சுவார்த்தைக்குப் பின்னடிக்கவோ, விலகி நிற்கவோ மாட்டோம் என்பதை உறுதியாகத் தெரியப்படுத்துகின்றோம். 

அதைவிடுத்து தற்போதைய பொருளாதார நிலைமையைச் சீர் செய்வதற்காக மீண்டும் மீண்டும் தமிழ்த் தரப்புகளை ஏமாற்றி அரசில் இணைய வைத்து இலங்கையின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதற்காக மக்களை ஏமாற்றாமல் உண்மையிலேயே இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்துவிட்டு எங்களுடன் பேச வாருங்கள். நாங்கள் உங்களுக்குப் பூரண ஒத்துழைப்புத் தருவது மாத்திரமல்லாமல் இந்த அரசுகளின் அட்டூழியங்களை, அநியாயங்களை, துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல் இந்த நாட்டில் இருந்து சென்ற புலம்பெயர் தேசங்களில் நன்றாகச் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் எங்களுடைய புலம்பெயர் உறவுகள் இந்த நாட்டின் பொருளாதாரத்தைக் கூட நிலைநிறுத்துவதற்கு உதவ முன்வருவார்கள் என்பதையும் நாங்கள் உறுதியாகக் கூறிக் கொள்கின்றோம். SHARE

Author: verified_user

0 Comments: