ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வாயிலாக வதந்திகளையும் இனவாதக் கருத்துக்களையும் பரப்புவோரை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கோரிக்கை
அண்மைக்கால அசாதாரண நிகழ்வுகள் காரணமாக மக்கள் ஒரு அச்சமான மனோ நிலையுடன் காணப்படுகின்ற சூழலில் மக்களை மேலும் பீதிக்கு உள்ளாக்க கூடிய வகையில் தகவல்களை பரவச் செய்கின்ற சில பொறுப்பற்ற ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை அரசு கண்காணித்து, இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா விடுத்துள்ளார்.
திங்கட்கிழமை (06) அவர் விடுத்துள்ள ஊடகஅறிக்கையிலே அவர் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது…
கடந்த கால வரலாறுகள் மூலமாக எமது நாடு மிகப்பெரும் வலியினையும் பின்னடைவினையும் எதிர் கொண்டிருந்தது, இதன் மூலமான துயர அனுபவங்களை கொண்ட மக்களால் மீண்டும் ஒரு இரத்த ஆறு ஓடுவதையும், அமைதி சீர்குலைவதையும் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது, குறிப்பாக முஸ்லிம் மக்கள் இந்த நாட்டின் இறைமைக்கும், அமைதிக்கும், சமாதானத்திற்கும், சக வாழ்விற்கும் துணை போவார்களே ஒழிய ஒருபோதும் தீவிரவாத சிந்தனைகளுக்கு இடமளிக்க மாட்டார்கள், அதனாலே தான் இன்றைய கால கட்டத்திலும் இவ்வாறான அடிப்படைவாத சிந்தனை கொண்ட தீவிரவாதிகளை அடையாளப்படுத்துவதிலும், இவர்களை கண்டறியும் பாதுகாப்பு தரப்பினரது நடவடிக்கைகளுக்கு தங்களின் முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதிலும் முன்மாதிரியுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஒரு சிறிய குழுவினது செயற்பாட்டை வைத்து ஒட்டுமொத்த சமூகத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தீவிரவாதிகளாக சித்தரிக்கின்ற ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டினை சில ஊடகங்களும், சமூக வலையத்தளங்களும் முன்னெடுப்பதை அனுமதிக்க முடியாது, இன நல்லுறவினையும், அமைதியையும் சீர் குலைக்கும் இவ்வாறானவர்களை அடையாளம் கண்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்குவது தொடர்பில் அரசு பூரண கவனம் செலுத்த வேண்டும் என வேண்டிக் கொள்கின்றேன்.
தீவிரவாதிகளது பின்புலம் பற்றி முழுமையாக அலசப்பட வேண்டும், தேசப்பற்றோடும் அனைத்து இனங்களோடு நல்லுறவோடும், சகிப்புத்தன்மையோடும் வாழுகின்ற இலங்கை முஸ்லிம் சமூகத்தை தனிமைப்படுத்துவதற்கான பாரிய நிகழ்ச்சி நிரலுடனான சதி முயற்சிகள் ஏதும் இதன் பின்னனியில் மறை கரத்துடன் செயலாற்றுகின்றதா எனும் சந்தேகம் இந்த ஊடகங்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளையும் சில அரசியல்வாதிகளது கருத்தாடல்களையும் பார்க்கையில் தோனுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment