12 Dec 2018

மட்டக்களப்பில் முதன்முறையாக தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் அழகு மலர்த் தாவர வளர்ப்புத் திட்டம்

SHARE
பயிற்சி நெறியுடன் இலவச உபகரணத் தொகுதியும் உள்ளீடுகளும் வழங்கி வைப்பு
மட்டக்களப்பில் முதன்முறையாக தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின்  அனுசரணையோடு அழகு மலர்த் தாவர வளர்ப்புத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராதனை தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுலோமி கிருஸ்ணராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட அழகு மலர்த் தாவர வளர்ப்போருக்கான உதவு ஊக்க உபகரணத் தொகுதிகளும் உள்ளீடுகளும் வழங்கும் நிகழ்வு புதன்கிழமை 12.12.2018 மட்டக்களப்பு பெரிய உப்போடையில் உள்ள அந்தூரியம் நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டு ஏற்கெனவே பயிற்சியளிக்கப்பட்ட அழகு மலர்த் தாவர வளர்ப்போர் 24 பேருக்கு தலா 18000  ஆயிரம் ரூபாய் பெறுமதியான உபகரணங்களும் உள்ளீடுகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டன.

அழகு மலர்த் தாவர வளர்ப்பை ஊக்குவிப்பதற்கான நோக்கம் பற்றி கருத்துத் தெரிவித்த பேராதனை தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் வடக்கு கிழக்கு கண்காணிப்பு அதிகாரி  ஏ. யோகராஜா, நாடாளாவிய ரீதியில் 185 அழகு மலர்த் தாவரங்கள் வளரப்போர் சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் அழகு மலர்த் தாவர வளர்ப்புத் திட்டம் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மட்டக்ளப்பு மாவட்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை பிரதேச செயலக மட்டத்திற்கும் விஸ்தரிக்க பேராதனை தாவரவியல் பூங்காத் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அழகு மலர்த் தாவர வளர்ப்புத் திட்டம் ஒரு சுய தொழிலாகவும் வருமானத்தை ஈட்டும் ஒன்றாகவும் பொழுது போக்காகவும் இருக்கிறது.

இதனையும் விட, மிக முக்கியமாக மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு ஒரு குணப்படுத்தலை ஏற்படுத்தக் கூடியது என விஞ்ஞான ஆராய்ச்சிகளின் முடிவு உள்ளதால் இது ஒரு சிறந்த அழகுணர்ச்சித் திட்டமாகப் பார்க்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் மூலம் நன்மையடைந்த கிளிநொச்சியைச் சேர்ந்;த பயனாளியான இளம் பெண்ணொருத்தர் மாதாந்தம் சுமார் மூன்றரை இலட்ச ரூபாவுக்கு மலர் விற்பனையில் ஈடுபட்டு தேறிய இலாபமாக சுமார் 80000 ரூபாவை ஈட்டிக் கொண்டிருக்கிறார்.

எனவே, இதனை ஒருங்கிணைந்த ஒரு செயற்திட்டமாக நாம் அமுல்படுத்தி வருகின்றோம்” என்றார்.

இந்நிகழ்வில் பேராதனை தாவரவியல் பூங்காத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுலோமி கிருஸ்ணராஜா,   பிரதிப் பணிப்பாளர் நாயகம் எம்.எம்.டி.ஜே. சேனாரத்ன,  வடக்கு கிழக்கு கண்காணிப்பு அதிகாரி  ஏ. யோகராஜா, மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாகிகியநாதன், ஏறாவூர் பிரதேச இளம் விவசாயிகள் அமைப்பின் தலைவர் எம்.எல். அப்துல் றஹ்மான் உட்பட அழகு மலர்த்தாவர வளர்ப்போரான பயனாளிகளும் கலந்து கொண்டனர்.









SHARE

Author: verified_user

0 Comments: