வாகரை – அம்பந்தனாவெளி எனும் கிராமத்திலுள்ள வீடொன்று மின்னொழுக்கினால் தீப்பற்றிய நிலையில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பிரதேச அனர்த்த நிவாரண சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜே. புவிதரன் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் நான்கு அங்கத்தவர்களைக் கொண்ட கணபதிப்பிள்ளை நாகரெத்தினம் என்பவர் தலைமையிலான குடும்பமே பாதிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தவருக்கு வாகரைப் பிரதேச செயலாளர் எஸ். ஹரனின் ஆலோசனைக்கமைவாக உடனடியாகவே வெள்ளிக்கிழமை 12.10.2018 வேர்ள்ட் விஷன் தன்னார்வ நிறுவனத்தின் அனுசரணையுடன் ரூபாய் 10000 (பத்தாயிரம்) பெறுமதியான உலருணவு நிவாரணம் வழங்கப்பட்டதாகவும் புவிதரன் மேலும் தெரிவித்தார்.
கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் எவரும் வீட்டிலில்லாத சமயம் இந்த மின்னொழுக்கு ஏற்பட்டுள்ளது.
வீடு தீப்பற்றிக் கொண்டதை அடுத்து அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்த போதும் தீயை அணைக்க முடியாமற்போய் வீட்டிலுள்ள அத்தனை உடமைகளும் எரிந்து நாசமாகியுள்ளன.
இச்சம்பவம்பற்றி தம்மிடம் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமைய தாம் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment