1 Oct 2018

அம்பாறை கரையோரத்தை காப்பற்ற வேண்டுமாயின் ஒலுவில் துறைமுகம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் பிரதியமைச்சர் பைஷல் காசீம்

SHARE
அம்பாறை கரையோர ஊர்களைக் காப்பற்ற வேண்டுமாயின் ஒலுவில் துறைமுகம் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என சுகாதார சேவைகள் பிரதியமைச்சர் பைஷல் காசீம் தெரிவித்தார்.
இதுவிடயமாக திங்கட்கிழமை 01.10.2018 பிரதியமைச்சர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒலுவில் பகுதி மீனவர்களுக்கும் அம்பாறை மாவட்டத்தின் பல கரையோர ஊர்களுக்கும் பேராபத்தை ஏற்படுத்தி இருக்கும் கடலரிப்பு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக் காண்பதாயின் ஒலுவில் வர்த்தகத் துறைமுகத்தை உடன் மூடிவிடுவதே சிறந்தது.

ஒலுவில் மீனவத் துறைமுகத்தை அப்படியே வைத்துவிட்டு வர்த்தகத் துறைமுகத்தை மட்டும்  மூடி இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது.

இது தொடர்பான எனது போராட்டம் மேலும் தொடரும்.
எமது மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது. கிழக்கு மாகாண மக்களின் நன்மை கருதியே அஸ்ரப் இந்தத் திட்டத்தை முன்னெடுத்தார். ஆனால், இதில் உள்ள பாதகங்கள் அப்போதைய அதிகாரிகளால் அல்லது அரசால் அஸ்ரப் அவர்களுக்கு சொல்லப்படவில்லை என்று நான் இப்போது உணருகிறேன்.

அப்படிக் கூறப்பட்டிருந்தால் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் இதை நிர்மாணிப்பதற்கு ஒருபோதும்  இணங்கி இருக்கவே மாட்டார்.

இந்தத் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாரிய கடலரிப்பு ஏற்படத் தொடங்கியது. துறைமுக நிர்மாணத்தின்போது கடலினுள் பாரிய கருங்கற்களால் தடை அமைக்கப்பட்டது. இந்தத் தடை ஏற்படுத்தப்பட்ட நாள் முதல் ஒலுவில், நிந்தவூர், பாலமுனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு போன்ற ஊர்களில் கரைவலை மீன்பிடி கிட்டத்தட்ட இல்லாமலேயே போயுள்ளது.

இயற்கையாக இடம்பெற்று வந்த கரை நீரோட்டம் பாதிக்கப்பட்டதனால் கரையோரத்தின் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் கடல்நீர் துறைமுக வாயிலை அடைப்பதுடன் துறைமுக்கத்தின் தென்பக்கம் மணலைக் கொண்டுவந்து சேர்க்கின்றது.

துறைமுக வாயில் அடைபடுவதனால் துறைமுகத்தினுள் மீன்பிடிப்  படகுகள் நுழைய முடியாமல் உள்ளன.

இதனால் துறைமுகத்தின் வடக்கு திசை பாரிய கடலரிப்புக்கு உள்ளாகியுள்ளது. வெளிச்ச வீடு மற்றும் துறைமுக அதிகார சபைக்குச் சொந்தமான சுற்றுலா விடுதிகள் போன்றவை பாதிக்கப்பட்டதால் இவற்றைப் பாதுகாப்பதற்காக அதிகாரசபை கடலினுள் வடக்கு தெற்காக அலைத்தடுப்பு வேலி ஒன்றினை அமைத்தது.

இந்த வேலி அமைக்கப்பட்டதன் பின் ஒலுவிலுக்கு வடக்குப் பக்கத்தில் உள்ள கரையோரப் பிரதேச கிராமங்களான அட்டப்பள்ளம், நிந்தவூர், காரைதீவு, மாளிகைக்காடு மற்றும் சாய்ந்தமருது போன்ற ஊர்கள் பாரிய கடலரிப்புப் பிரச்சினைக்கு உள்ளாகிவிட்டன.

பாலமுனை கடற்கரை சுமார் ஒரு கிலோ மீற்றர் வரை கடலுக்குள் சென்றுவிட்டது.
15 ஆயிரம் கரைவலை குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடல் தாவரங்கள் பல அழிந்து வருகின்றன. கரையோரத்தில் இருந்த வயற்காணிகள் மற்றும் தென்னந்தோப்பு உள்ளிட்ட ஐம்பதுக்கு மேற்பட்ட ஏக்கர் காணி கடலுக்குள் உள்ளீர்க்கப்பட்டுள்ளன. கடற்பாறைகள் வெளித்தள்ளப்பட்டுள்ளதால் மீனவர்களின் வலைகளுக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

SHARE

Author: verified_user

0 Comments: