மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்றுப் பிரதேசம் 180 சதுரக்கிலோ மீற்றர் பரப்பளவில் 44000 மக்கள் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் 1000 லீற்றர் நீர் கொள்வனவுடைய 96 நீர்த் தாங்கிகளை கிராமங்களிலும், பாடசாலைகள், மற்றும் பொது இடங்களிலும் வைத்துக் கொண்டு ஒரு நாளைக்கு 120000 லீற்றர் குடிநீரை பெரிய வவுசர்கள் மூலம் மக்களுக்கு வழங்கி வருகின்றோம். நீரேந்து பகுதிகளிலிருந்த நீரும், கிணறுகளிலும் நீர் முற்றாக வற்றிப்போயுள்ளது இதனால் தொடர்ந்து வரட்சி நிலவி வருகின்றது.
என போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் யோகநாதன் ரஜனி தெரிவித்தார். போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து சிறிய குளங்களும் வற்றியுள்ள நிலையில் கிணறுகளும் வற்றி தற்போது அப்பகுதியில் அதிக வரட்சி நிலமை காணப்படுகின்றது. இவ்விடையம் தொடர்பில் ஞாயிற்றுக் கிழமை (30) போரதீவுப்பற்றுப் பிரதேச சபையின் தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….
4000 லீற்றர் வவுசர்கள் நான்கும், 7000 லீற்றர் வவுசர் ஒன்றுமாக மொத்தம் 5 வவுசர்களிலேயே மக்களுக்குரிய குடிநீரை நாம் நாளாந்தம் தடையின்றி வழங்கி வருகின்றோம். இந்நிலையில் நீரேந்து பகுதியில் தேங்கியிருந்த நீர் அனைத்தும் முற்றாக வற்றிவிட்டன, இதன் காரணமாக மிகவும் பாரிய சிரமத்தின் மத்தியில் மக்களுக்கு குடிநீரை வழங்கி வருகின்றோம். ஆனாலும் மக்கள் தன்னிறைவடையாத அளவிற்குத்தான் எமது நீர் வினியோக செயற்பாடு இடம்பெற்று வருகின்றது. தொடர்ந்து நீர் ஏற்றுவதனால் எமது நீர் ஏற்றும் பெரிய வவுசர்கள் பழுதடைவதனாலும் மக்களுக்கு திருப்திகரமான முறையில் எம்மால் நீரை வழங்க முடியாதுள்ளது.
இவ்விடையம் தொடர்பில் போரதீவுப்பற்றுப் பிரதேச செயலாளரூடாக மாவட்ட செயலாளருக்கும், அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளருக்கும், அறிவித்துள்ளோம். எமக்கும் தேவையான நீர்த்தாங்கிகள் வருவதாக தெரிவித்துள்ளார்கள் அவை இன்னும் எமக்கு வந்து சேரவில்லை.
எமது பிரதேசத்திற்கு அண்மையிலுள்ள பெரிய குளமாகவுள்ள நவகிரிக் குளத்திலிருந்து வாய்க்கால் வழியாக பொறியியலாளரின் உதவியுடன் 2 தடவைகள் நீர் திறந்து விடப்பட்டிருந்தன. அந்தக்குளத்திலும் நீர் குறைவடைந்து செல்வதனால் மக்கள் பாரிய குடிநீர் பிரச்சனைக்கு முகம் கொடுத்துள்ளார்கள். இந்நிலையிலேதான் எமது குடிநீர் வழங்கும் செயற்பாடு சென்று கொண்டிருக்கின்றது.
இவற்றைத் தவிர எமது பிரதேசத்திலுள்ள பாடசாலைகள், ஆலய உற்சவங்கள், விசேட நிகழ்வுகள், அரச காரியாலயங்கள், போன்றவற்றிற்கும் குடிநீர் வழங்கி வருகின்றோம். எப்போதுமில்லாத வகையில் இவ்வருடம் பாரிய வரட்சி காணப்படுகின்றது. இதனால் மக்கள் மாத்திரமின்றி கால்நடைகளும் வெகுவாகப் பாதிப்படைந்துள்ளன. இச்சந்தர்ப்பத்தில்தான் அரசாங்கம், தனியார் அமைப்புக்களிடமும், உதவியை நாடிநிற்கின்றோம் என அவர் மேலும் தெவித்தார்.
0 Comments:
Post a Comment