புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை சம்பந்தன் நினைத்திருந்தால் அரசிடம் கதைத்து இலகுவாக மூடிவிடலாம். ஏன் அவர் அரசிடம் கதைத்து செய்யவில்லை. நாட்டிலே பலமான எதிர்கட்சித் தலைவராக இருக்கும் சம்பந்தன் ஐயா அவர்கள் கொஞ்சம்கூட வாய்திறந்து பேசாமல் வாய்மூடி மௌனீயாக இருப்பது தமிழ் மக்கள் மத்தியில் பாரியதொரு சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது என மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைப்பாளர் தருமலிங்கம்-ஹெங்காதரன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பட்டிருப்பு தொகுதிக்கான அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் கூட்டம் பெரியகல்லாறு கட்சியின் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) மாலை நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்தார்.
அமைப்பாளரின் ஆலோசகர் சபாவதி நோவேட் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ரீ.யஜேந்திரசா, வெல்லாவெளி இணைப்பாளர் ஏ.ஜெயராஜ் கண்ணன், அமைப்பாளரின் செயலாளர் ஜோன் பிரசன்னபிள்ளை, உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் தொடர்ந்து இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்…. தனித்தமிழ் தொகுதியான பட்டிருப்புத் தொகுதியிலேயே 92316 வாக்குகள் தமிழ்மக்களிடம் இருக்கின்றது. இந்த வாக்குகளை தமிழ் மக்கள் சரியான முறையில் பயன்படுத்தினால் அல்லது ஆளுந்தரப்புக்கு வாக்களித்திருந்தால் தமிழ் மக்கள் மூன்று அமைச்சர்களை பெற்றிருக்கலாம். தற்போது பட்டிருப்புத் தொகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் வாக்குகள் சிதறடிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் பொதுமக்கள் அங்குமிங்கும் அலைந்து திரிகின்றார்கள். இது தமிழ் தேசிய கூட்டமைப்பினர் விட்ட பாரியதொரு பிழையாகும். இதனால் தமிழர்களாகிய நாம் அவமானம் சுமந்து வாழ்கின்றோம்.
பட்டிருப்புத் தொகுதியில் உள்ள தமிழ்மக்கள் தங்களின் வாக்குகளைப் ஆளுந்தரப்பு கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் மூன்று அமைச்சர்களை உருவாக்கலாம். 92316 வாக்குகளை கொண்ட பட்டிருப்பு தொகுதியானது முஸ்லிம் மக்களின் தொகுதியாக இருந்திருந்தால் இன்று மூன்று அமைச்சர்களை பெற்றுக்கொண்டு பாரியதொரு அபிவிருத்தியை செய்து வளம்கொழிக்கும் பிரதேசமாக மாற்றிருப்பார்கள். தமிழ் மக்கள் விட்ட பிழையை இனிமேலும் தவறாக பயன்படுத்தாமல் ஆளும்தரப்புக்கு இடுவதன்மூலம் தரமான அமைச்சுப்பதவிகளை பெறமுடியும். ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 17000 வாக்குகளைப் பெற்ற அமைச்சர் ஹிஸ்புல்லா இன்று மாவட்டத்தில் கதாநாயகனாக திகழ்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் மூன்று இலட்சம் இருக்கின்றது. ஒழுங்காக தமிழ் மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வாக்களித்திருந்தால் ஹிஸ்புல்லாவை வீட்டுக்கு அனுப்பியிருக்கலாம். புல்லுமலை தொழிற்சாலை பிரச்சனையென்று இன்று மாவட்டத்தில் பிரச்சனை தோன்றிருக்காது. தமிழர்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சிக்கு வாக்களிப்பதன்மூலம் மாவட்டத்தின் தமிழ் பகுதியை முழுமையாக அபிவிருத்தி செய்யலாம்.இதனை மாவட்டத்தில் உள்ள புத்திஜீவிகள், அரசியல்வாதிகள், தமிழர்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.
மட்டக்களப்பு புல்லுமலை குடிநீர் தொழிற்சாலை பிரச்சனை தற்போது பரவலாக பேசப்படுகின்றது. இந்த குடிநீர் தொழிற்சாலை பிரச்சனையை எதிர்கட்சித் தலைவர் சம்பந்தன் ஐயா நினைத்திருந்தால் மிகவும் சுலபமா அரசிடம் கதைத்து தொழிற்சாலையை மூடிவிடலாம் மூடிவிட்டிருக்கலாம். ஏன் இதனை சம்பந்தன் ஐயா செய்யவில்லை. தமிழ்மக்கள் இதனை சற்று ஆழமாக சிந்தித்து செயற்படவேண்டும். வாக்களித்த மக்களுக்கு சம்பந்தன் ஐயா இதுவரையும் உருப்படியாக செய்தவேலை என்ன...? தமிழ் மக்களுக்கு இதுவரையும் தீர்வு பெற்றுக் கொடுத்திருக்கின்றாரா..? தமிழ்மக்களின் பிரச்சனைகளுக்கு பதில் சொல்லியாக வேண்டும். புல்லுமலை குடிநீர் தொழிற்சாலையை மிகவும் சுலபமாக கதைத்து தீர்த்திருக்கலாமே .அதை ஏன் செய்யவில்லை. அவருக்கு வாக்களித்த மக்களுக்கு செய்யனும் என்று நம்பிக்கையையுமில்லை விசுவாசமில்லை.
பட்டிருப்பு தொகுதியில் உள்ள வெல்லாவெளி, பட்டிப்பளை, மண்டூர் பகுதியில் மிகவிரைவில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அலுவலகம் திறக்கவுள்ளேன். இதன்மூலம் மக்களின் பிரச்சனைகள், தேவைகள், அபிவிருத்தி விடயங்களை விரைவுபடுத்தி செய்யவுள்ளோம் .நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு மலசலக்கூடங்களை அமைக்கவுள்ளோம். வீடமைப்பு வசதிகள், வீதிபுனரமைப்பு, குளங்கள் புனரமைப்பு வேலைகளை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் கதைத்து செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம் எனத் தெரிவித்தார்.




0 Comments:
Post a Comment