ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, தன்னாமுனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 17.06.2018 இடம்பெற்ற வீதி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து நிகழ்ந்த விதம்பற்றி பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாவது, முச்சக்கரவண்டி, தன்னாமுனை பிரதான வீதியால் பயணித்துக்கொண்டிருக்கும்போது, குறுக்கு வீதியிலிருந்து பிரதான வீதிக்கு திடீரென மோட்டார் சைக்கிள் ஒன்று பிரவேசித்துள்ளது.
மோட்டார் சைக்கிளுடன் மோதுப்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காக முச்சக்கரவண்டியை வீதியின் மத்திக்குத் நகர்த்தியபோது எதிரே வந்த உழவு இயந்திரமொன்றில் கொழுவி இழுபட்டு முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதியும் பின்னால் அமர்ந்திருந்த அவரது மகளும் படுகாயமடைந்து உதவிக்கு விரைந்தோரால் வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்
விபத்தில் முச்சக்கரவண்டியும் முழுமையாகச் சேதமடைந்துள்ளது.
குறுக்கு வீதியிலிருந்து பிரதான நெடுஞ்சாலைக்கு திடீரென பிரவேசித்த மோட்டார் சைக்கிள் தப்பிச்சென்றுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 Comments:
Post a Comment