விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நாடளாவிய ரீதியிலுள்ள விவசாயிகள் நடாத்திய பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டவாறு சந்தையில் பெற்றுக் கொள்ளக் கூடிய மேலதிக மானிய விலைக்கான உரம் செவ்வாய்க்கிழமை 15.05.2018 மட்டக்களப்பை வந்தடைந்து விநியோகம் ஆரம்பமாகியுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளதாக மட்டக்களப்பு உன்னிச்சை குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவ குழுத்தலைவர் கே. யோகவேள் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோகச் செய்கை ஆரம்பித்து ஒரு மாதத்தைக் கடந்து நெற்பயிர்கள் வளர்ந்துவிட்ட நிலையில் அரசின் இலவச உரமானிய விநியோகம் ஆரம்பித்திருந்தது.
தொடர்ச்சியாக விவசாயிகள் மேற்கொண்டு வந்த அழுத்தங்களின் காரணமாக சற்றுத் தாமதமாகவேனும் இலவச உரமானியம் கிடைத்துவிட்டது.
இதனிடையே. இலவச உர மானியத்துக்கு மேலதிகமாக சந்தைகளில் 1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என அரசினால் வாக்குறுதியளிக்கப்பட்ட உரத்தை உர விநியோக நிறுவனங்களிடமிருந்து பெறுவதில் விவசாயிகள் சிக்கலை எதிர்கொண்டனர்.
1500 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யும் உரத்துடன் உரத் தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ப்பந்திக்கும் கிருமி நாசினி, பீடைக் கொல்லி அல்லது விவசாயத்துக்கான வேறேதும் உற்பத்திப் பொருளையும் அதிக விலைக்கு வாங்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து அதிருப்தியுற்ற விவசாய அமைப்புக்கள் அமைச்சர் மஹிந்த அமரவீரவை நேரில் சந்தித்து இந்த விடயத்தை அவரின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தன.
இந்த விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு விவசாயிகளுக்கு 1500 ரூபாவுக்கு உரத்தை மாத்திரம் உர விநியோக நிறுவனங்கள் விற்பனை செய்ய வேண்டும். அதனோடு சேர்த்து வேறு தயாரிப்புக்களை வாங்க நிர்ப்பந்திக்கக் கூடாது. அவ்வாறு இடம்பெறும்பட்சத்தில் அது குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார்.
அவரது பணிப்புரைக்கமைய செவ்வாய்க்கிழமை 15.05.2018 மட்டக்களப்பு மாவட்டத்தில் உர விநியோகஸ்தர்கள் மூலமாக குறித்த 1500 ரூபாவுக்கான மேலதிக மானிய உரத்தை விலை கொடுத்து போதியளவு பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
இது இம்முறை விவசாயிகளுக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும் என்றும் யோகவேள் மகிழ்ச்சி தெரிவித்தார்.
அரசாங்கம் ஒரு ஏக்கர் நெல் விவசாயத்திற்கு 5000 ரூபாவை உரமானியமாக வழங்குகின்றது. ஆகக் கூடியது ஒரு விவசாயிக்கு ஐந்து ஏக்கருக்கே உரமானியம் கிடைக்கும். தற்போது ஒரு 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை 500 ரூபாவுக்கு அரசு உர மானியமாக வழங்குகின்றது.
அதேவேளை 5 ஏக்கருக்கு மேல் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தமக்குத் தேவையான 50 கிலோகிராம் கொண்ட உரப்பையை சந்தையில் 1500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்தற்காக அரசு சலுகை அளித்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் சுமார் 61,280 ஏக்கர் நெற் செய்கை விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment