16 May 2018

அரசாங்கத்தின் தடுமாற்றம் எரிபொருள் விலையேற்றத்தில் வெளிப்படுகிறது. சாடுகிறார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமத்

SHARE
யுத்தச் செலவுகளுமில்லை, கெடுபிடி நெருக்கடிகளுமில்லை பாரிய அபிவிருத்திகளுமில்லாத சூழ்நிலையில் எரிபொருள் விலையேற்றம் எதற்கு ? அரசாங்கம் உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் இல்லாமல் தடுமாறுவதையே இது காட்டுகிறது என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமத் கேள்வி எழுப்பினார்.
திடீரென மேற்கொள்ளப்பட்ட அபரிமதமான விலையேற்றம் மற்றும் அதனைத் தொடர்ந்து எழுந்துள்ள ஸ்திரமற்ற நிலைமை தொடர்பாக முன்னாள் முதலமைச்சரால் புதன்கிழமை 16.05.2018 வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நல்லாட்சி என நம்பி இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தவர்களில் அநேகமானோர் பாட்டாளி வர்க்கத்தினர்தான்.

ஆனால், இந்த நல்லாட்சி அரசு பாட்டாளி மக்களுக்கான திட்டமிட்ட உறுதியான பொருளாதாரக் கொள்கைகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அதுபற்றிச் சிந்திக்கவும் இல்லை.

நாட்டிலுள்ள புத்திஜீவிகளின் மனித வளம் பயன்படுத்தப்படாததால் அவர்கள் புலம்பெயர வேண்டியேற்பட்டுள்ளது.

அதேநேரம் ஆண்களும் பெண்களுமான இலங்கையின் சாதாரண தொழிலாளர் படையினரில் பெரும்பகுதி மத்திய கிழக்கில் முடங்கிப் போயுள்ளது.

நாட்டு வளங்கள் சர்வதேச ஜாம்பவான் முதலாளி வர்க்கத்துக்கு தாரை வார்க்கப்படுகின்றன.

ஏழைகள் மீதே வரி அறவிடப்படுகின்றது. எடுத்ததற்கெல்லாம் வரி அறவிடும் வங்குரோத்துப் பொருளாதார நிலையில் அரசு தடுமாறுகிறது.

உள்ளுர் வளங்களை உச்ச மட்டத்திற்குப் பயன்படுத்தும் எந்தவிதமான சாத்தியவள ஆய்வுகளும் திட்டங்களும் அரசிடம் இல்லை.

இப்பொழுது நாட்டில் யுத்தம் இடம்பெறவில்லை. எனவே யுத்தத்திற்குச் செலவழிக்கப்பட்ட நிதி அபிவிருத்திக்குச் செலவு செய்யப்படலாம். ஆனால், தூரநோக்கான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் அரசிடமில்லை.

அடிமட்ட மக்களின் வயிற்றிலடிக்கும் எரிபொருள் விலையேற்றத்தை அரசு கண்மூடித் தனமாக மேற்கொண்டுள்ளது.

எரிபொருளுக்கான அதிகரித்த திடீர் விலையேற்றம் அனைத்துப் பொருட்களுக்குமான மறைமுக விலையேற்றத்திற்குக் காரணமாக அமைந்து விடும் என்பது அரசுக்குத் தெரியாவிட்hலும் அடிமட்ட மக்களுக்கு நன்கு தெரியும்
அதன் முதலாவது விளைவாக இப்பொழுது போக்கு வரத்துக் கட்டணங்கள் கிட்டத்தட்ட 7 சத வீதத்தினால் உயர்ந்துள்ளன.

ஆனால் அதுவும் போதாதென்று தனியார் பஸ் உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தயாராகிறார்கள்.

அரசு தட்டுத் தடுமாறிப் பயணிக்கிறது என்பதை நடப்பு நிகழ்வுகள் கட்டியம் கூறுகின்றன.

அரசுக்கு முன்னால் உள்ள பொறுப்புக் கூறவேண்டிய பணிகளை அரசு தட்டிக் கழித்து விட்டு இப்பொழுது கவனத்தை எங்கோ திசை திருப்புகிறது. மக்கள் நம்பிக்கையிழந்து வருகின்றார்கள். அரசு தடம்புரண்டு பின்னோக்கிச் சென்றுகொண்;டிருக்கின்றது.

SHARE

Author: verified_user

0 Comments: