16 May 2018

அரச அலுவலர்களுக்கு புனித றமழான் நோன்பு காலத்தில் விஷேட கடமை நேர அறிவித்தலும் விழா முற்பணம் வழங்கும் ஏற்பாடுகளும்

SHARE
அரசாங்க அலுவலகங்களில் கடமையாற்றும் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கென புனித றமழான் நோன்பு காலத்தில் விஷேட கடமை நேர சுற்றறிக்கை ஒன்றை அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.
மே மாதம் 17ஆம் திகதி ஆரம்பமாகி ஜுன் மாதம் 16ஆம் திகதி வரைக்குமான அந்த அறிவித்தலில் முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு தொழுகையிலும் மத வழிபாடுகளிலும் கலந்து கொள்ளக் கூடிய ஒழுங்குகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டச் சபைகளின் தலைவர்கள் ஆகியோருக்கு இந்தச் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அவர்களால் கையொப்பமிடப்பட்டு  அனுப்பி வைக்கப்பட்டுள்ள அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, றமழான் பெருநாளின் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாக அரச சேவை கூட்டுத்தாபனங்கள், நியதிச் சட்ட சபைகள் ஆகியவற்றில் கடமையாற்றும் தகைமையுடைய முஸ்லிம் உத்தியோகத்தர்களுக்கு விழா முற்பணம் வழங்குவற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், றழமான் நோன்பு காலத்தின்போது உத்தியோகத்தர்கள் சமய வழிபாடுகளில் கலந்து கொள்ளக் கூடியதாக வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மட்டும் விசேட லீவு அங்கீகரிக்கப்படலாம்.

முற்பகல்  3.30 முதல் முற்பகல் 6.00 வரை
பிற்பகல்  3.15 முதல் பிற்பகல்  4.15 வரை
பிற்பகல்  6.00 முதல் பிற்பகல்  7.00 வரை

பிற்பகல்  7.30 முதல் பிற்பகல்  10.30 வரை தொழுகைகளும் மத வழிபாடுகளும் நாளாந்தம் இடம்பெறும் வகையில் வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் வேண்டும்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE

Author: verified_user

0 Comments: