18 May 2018

ஜனாதிபதியின் பங்கேற்புடன் தேசிய ரணவிரு நிகழ்வுகள்

SHARE
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் தாய் நாட்டிற்காக தமது உயிரைத் தியாகம் செய்த, காணாமல்போன அல்லது சம்பவங்களின்போது அங்கவீனமடைந்த, முடக்கப்பட்ட படையினர் மற்றும் பொலிஸாரை நினைவு கூறும் தேசிய “ரணவிரு” நிகழ்வுகள் சனிக்கிழமை மாலை 19.05.2018 கொழும்பு பத்தரமுல்லையில் உள்ள நாடாளுமன்ற விளையாட்டுத் திடலில் இடம்பெறவுள்ளதாக தேசிய ரணவிரு சேவையின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பு அலுவலர் ரீ.எச். கீர்திகா ஜயவர்தன தெரிவித்தார்.
நாடாளாவிய ரீதியில் இருந்து பங்கு பற்றும் சுமார் 3000 இற்கு மேற்பட்ட ரணவிரு சேவாவைச் சேர்ந்த சிங்கள, தமிழ், முஸ்லிம் குடும்பங்களுடன் மட்டக்களப்பு மாவட்டைச் சேர்ந்த 50 இற்கு மேற்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்களக் குடும்பங்களும் இந்நிகழ்வில் இணைந்து கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பத்தரமுல்லையிலுள்ள நாடாளுமன்ற விளையாட்டுத் திடலில் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெறும் “நினைவு கூறுதல்” நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முப்படை அதிகாரிகள், ரணவிரு சேவா அதிகார சபை அதிகாரிகள், மற்றும் ரணவிரு சேவா பயனாளிக் குடும்பங்களும் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை உருவாக்கும் மனிதாபிமான செயற்பாட்டின் போது தமது உயிர்களை தாய் நாட்டிற்காக அர்ப்பணித்த மற்றும் தமது உடல் அவயவங்களை தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் அரசாங்கத்தின் அனுசரணையுடன் ரணவிரு சேவா அதிகார சபையினால்; ரணவிரு ஞாபகார்த்த நிகழ்வுகள் வருடாவருடம் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்படுகின்றன.

SHARE

Author: verified_user

0 Comments: