இலங்கைக் கல்வி முறைமையின் ஒழுங்குபடுத்தலும் கட்டமைப்பும் இனவாத, மதவாத அல்லது மொழிவாதத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதால் இலங்கையராகிய நாம் சகவாழ்வை இழந்துள்ளோம் என தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் செயற்பாட்டாளரும் இலங்கைத் திரைப்பட இயக்குனரும் வசன கர்த்தாவுமான விமுக்தி ஜயசுந்தர தனது ஆதங்கத்தை வெளியிட்டார்.
சம காலத்தில் நாட்டு மக்களிடையே சகவாழ்வு வெவ்வேறு வடிவங்களில் குழப்பப்பட்டுக் கொண்டிருப்பதன் ஆழமான பின்னணி பற்றி அவர் வியாழக்கிழமை 03.05.2018 கருத்து வெளியிட்டார்.
தொடர்ந்து தனது ஆதங்கத்தை வெளியிட்ட அவர்,
இலங்கைக் கல்வி முறைமையின் ஒழுங்குபடுத்தலில் பாலர் வகுப்பு முதற்கொண்டு 13 ஆண்டுகள் வரை மாணவர்களை ஏதோவொரு வகையில் விரும்பியோ விரும்பாமலோ இனவாத மதவாத மொழிவாத அடிப்படையிலான பாடசாலைகளில் கற்கச் செய்து விட்டு எந்தவிதமான ஆயத்தப்படுத்தல்களும் இல்லாமல் சம்பந்தப்பட்ட மாணவனோ மாணவியோ பாடசாலையை விட்டு வெளியேறியதும் 14ஆம் வருடம் முதல் திடீரென இன ஒற்றுமையாக இருந்து கொள் என்று கூறுவதும் சகவாழ்வைப் பற்றிப் போதிப்பதும் நகைப்புக்கிடமாக இருப்பதாக அவர் வேதனை வெளியிட்டார்.
கல்விக் கூடாகவே பிரிவினையை வளர்த்து விட்டு பின்னாட்களில் சகவாழ்வையும் சமாதானத்தையும் பற்றிப் பேச நமக்கு என்ன அருகதை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அறிவு சார்ந்து கற்பிப்பதைச் சிந்திக்காமல் நமது பிள்ளைகளை இனம் சார்ந்து சமயம் சார்ந்து மொழி சார்ந்து கல்வி கற்பி;க்கும் சூழல் நடைமுறைதான் தற்போதைக்கு உள்ளது.
நமக்குள்ள இலங்கையர் என்ற அடையாளத்தை இழப்பதில் நாளுக்கு நாள் நாம் போட்டி போட்டுக்கொண்டு நாசமிழைத்து வருகின்றோம் என்பதையிட்டு இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஏங்கிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் கவலைதான்.
குறிப்பாக இலங்கையராகிய நாங்கள் இழந்து விட்ட சகவாழ்வை எவ்வாறு மீளக் கட்டியெழுப்பலாம் என்பது பற்றி கலைஞர்களாகிய நாங்கள் கவலையோடு உள்ளோம்.
ஆனால், சாண் ஏற முழம் சறுக்கும் நிலைதான் காணப்படுகிறது என்றும் வேதனை வெளியிட்டார்.
வன்முறைகளில் நாம் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்ல என்று களத்தில் நின்று கர்ஜிப்பதாலா இலங்கையர் என்ற சிறப்பு அடையாளம் ஒருபோதும் வரப்போவதில்லை.
முதலில் நாம் மனிதாபிமானமுள்ள மனிதர்கள் என்பதை நிரூபித்தாக வேண்டும். அதன் பின்னர் இலங்கை மாதாவின் புதுப்பிக்கப்பட்ட, பிரிக்க முடியாத புதல்வர்கள் புதல்விகள் என்பதை புதிதாகச் சொல்லியாக வேண்டும்.” என்றார்.
விமுக்தி ஜயசுந்தரவின் "சுளங்க எனு பினிஸ" எனும் "யுத்தமோ சமாதானமோ இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சமகால நிலையினை" சித்தரிப்பதாக அமைந்த இத்திரைப்படத்திற்கு கெமராடியோர் விருது கிடைக்கப்பபெற்றது. மேலும், "த லேண்ட் ஒப் சைலன்ஸ்" எம்டி போ லைப்" ஆகிய விவரண மற்றும் குறுந் திரைப்படங்கள் சமகால நடப்புக்களையும் சகவாழ்வின் சறுக்கல்களையும் சித்தரிப்பதாய் அமைந்திருப்பதோடு அவை விருதுகளையும் பெற்றுக் கொண்டன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment