காத்தான்குடி நகர சபைப் பிரிவில் கவனிப்பாரின்றி அலைந்து திரிந்த நிலையில் கைப்பற்றப்பட்ட 22 கட்டாக்காலிகளில் 15 மாடுகள் தலா 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்தப்பட்டதன் பேரில் அதன் வளர்ப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக நகர சபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமை 20.04.2018 நள்ளிரவு முதல் காத்தான்குடி நகரசபைப் பிரிவில் தொடங்கப்பட்ட கட்டாக்காலிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 22 மாடுகள் கைப்பற்றப்பட்டன.
அவற்றில் 15 மாடுகளை உரியவர்கள் வந்து ஒரு மாட்டுக்கு தலா ஐயாயிரம் ரூபாய் வீதம் தண்டப்பணம் செலுத்தியபின் விடுவித்தச் சென்றுள்ளனர்.
இன்னமும் 7 மாடுகள் உரிமை கோரப்படாமல் நகரசபையின் பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
கட்டாக்காலிகளைக் கட்டுப்படுத்தும் காத்தான்குடி நகர சபையின் இத்திட்டம் கால்நடை வளர்ப்பாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது ஒரு வெற்றியாகும்.
ஏற்கெனவே நகர சபையில் எடுக்கப்பட்ட ஒத்திசைவான தீர்மானத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் நிடைமுறைப்படுத்தப்படுகின்றது.
பிரதேசப் பொதுமக்கள், பாடசாலை நிருவாகம், வாகன ஓட்டிகள், பயணிகள், பொழுது போக்காளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஆகிய பல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அமைவாக கட்டாக்காலிகளைக் கைப்பற்றி அவற்றுக்கு தண்டப்பணம் விதிக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டது.
கட்டாக்காலிகளின் உரிமையாளர்கள் நகர மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொண்டு நகர சபை நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நகர சபைத் தலைவர் வலியுறுத்தினார்.
கட்டாக்காலிகளால் நகர பொதுப் போக்குவரத்து பாதிக்கப்படுவதோடு நகரம் அசுத்தப்படுத்தப்படுவதாகவும் இதனால் நகர சபைத் தொழிலாளர்கள் சிரமத்தை எதிர்நோக்குவதாக பல தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 Comments:
Post a Comment