1 Apr 2018

பொய்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும்

SHARE
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பொய்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பொய்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும், பொய்களைத் தொடர்ந்தும் தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக் காரியாலயத்தில் சனிக்கிழமை (31) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 120வது பிறந்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தந்தை செல்வா தன்னுடைய பண்புகள் நடத்தைகள் மூலமாக எதிரிகளையும் கவரக் கூடிய விதத்திலும், தன்னுடைய நியாயப்படுகளை மற்றவர்கள் மெச்சத்தக்க விதத்திலும் அவர் செயற்பட்டிருக்கின்றார். அரசியலால் அவர் உழைத்துப் பெருமை சேர்த்தவர் அல்ல. அரசியலால் அவர் வறுமைக்குத் தள்ளப்பட்டவர் என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் தான் அவரைத் தூய்மையானவர், எளிமையானவர், அருமையானவர் என்று சொல்லுகின்றோம். அப்படிப்பட்ட மாமனிதர் இந்தக் கட்சியை ஸ்தாபித்ததன் காரணமாகத் தான் இந்தக் கட்சிக்கு அழிவில்லை, எத்தனை இடர்பாடுகள், இழப்புகள், முடக்கங்கள் வந்தாலும் அவற்றையெல்லாம் கடந்து இக் கட்சி உயர்ந்து செல்லுகின்றது என்றால் அவருடைய பண்பும் பக்குவமும், களப்படம் இல்லாத் தண்மையும் தான் காரணமாக இருக்கின்றது. நாங்கள் அவருக்குச் செய்ய வேண்டிய கைங்கரியம் என்னவென்றால் அவரின் பண்புகளில் குறைந்த பட்சம் சிலவற்றையாவது நாங்கள் பின்பற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இன்றைய காலகட்டத்தில் உள்ளுராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்து சபை அமைக்கின்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் தன்முனைப்பு சிந்தனைகளை விட விட்டுக் கொடுப்புகள், சகிப்புத் தண்மை, பரஸ்பர புரிந்துணவர்வு போன்ற தந்தை செல்வாவின் விழுமியங்களை கையிலெடுக்காது விட்டால் நாங்கள் தந்தை செல்வாவில் இருந்து அரசியல் செய்கின்றோம் என்று சொல்வதில் எவ்வித பயனும் இல்லை.
தந்தை செல்வா நினைத்திருந்தால் பல பதவிகளைப் பெற்று பலவாறு அபிவிருத்திகளைச் செய்திருக்க முடியும். ஆனால் அவருடைய தெரிவில் முதலாவதாக இருந்தது தமிழரின் உரிமை. அதனைப் பெற்றெடுத்து அடுத்த கட்டமாக அபவிருத்தியைச் செய்வோம் என்ற எண்ணமே அவருக்கு இருந்தது. தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த ஒரு தன்நிகரில்லாத் தலைவராகத் தந்தை செல்வா விளங்கியிருக்கின்றார். இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வருகின்ற தலைவர்கள் தந்தை செல்வாவின் பண்புகளை கடைப்பிடிக்க வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான பொய்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. அலைகள் ஓய்வதில்லை என்று சொல்வதைப் போல பொய்கள் ஓய்வதில்லை என்று சொல்ல வேண்டி இருக்கின்றது. அந்தப் பொய்களுக்கான மாற்றுக்கருத்துக்களை வெளிப்படுத்தக் கூட விருப்பமில்லாத போக்கினைக் கொண்ட சில சில ஊடகங்களைக் கூட நாங்கள் காணக் கூடியதாக இருக்கின்றது. ஒரு காலத்தில் ஒரு ஊடகத்தைக் கூடுதலாகப் பார்த்த தமிழ் மக்கள் தற்போது அதை விடுத்து வேறு ஊடகத்தைப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள் என்றால் பொய்களைத் தொடர்ந்தும் தமிழ் மக்கள் நம்ப மாட்டார்கள். சிலரைச் சில நாள் ஏமாற்றலாம், பலரைப் பலநாள் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா நாளும் ஏமாற்றிவிட முடியாது. பொய்களின் முகமூடிகள் கிழித்தெறியப்படும், பொய்யர்கள், புரட்டர்கள், போலிகள் யார் என்பதையெல்லாம் விளங்கிக் கொள்வதற்கான காலம் தூரத்தில் இல்லை என்று தெரிவித்தார்.(tx.tc)
SHARE

Author: verified_user

0 Comments: