21 Mar 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை உடன் பதவி நீக்கம் செய்யவும்.

SHARE
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள மண்முனை தென் எருவில் பற்று, போரதீவுப்பற்று, மற்றும் மண்முனை தென் மேற்கு ஆகிய 3 உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேபாளர்கள், ஒன்றிணைந்து செவ்வாய்க் கிழமை (20 மாலை எருவில் கிராமத்தில் அமைந்துள்ள வதனகுமார் என்பவரின் வீட்டில் ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.
நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பலம் பொருந்திய பல கட்சிகளை எதிர்த்து நாம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருந்தோம். தேர்தல் காலத்தில் எமது கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இ.தவஞானசூரியம், மற்றும் மாவட்ட அமைப்பாளர் த.கெங்காதரன் ஆகியோர் எமக்கு எந்தவழத உதவிகளையும் மேற்கொள்ளவில்லை. எமக்காக எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு அவர்களில் யாரும் ஒத்துழைப்புக்களை வழங்கவில்லை. என அவர்கள் இதன்போது தெரிவித்தனர். 

அவர்கள் இதன்போது மேலும் தெரிவிக்கையில்….

இது ஒருபுறமிருக்க மேற்படி உள்ளுராட்சி மன்றங்களுக்கு விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அங்கத்தவர்களை வழங்கும் தெரிவில்கூட களத்தில் நின்ற வேட்பாளர்களாகிய எங்களிடம் கலந்தாலோசிக்காமல் அவர்களின் தனிப்பட்ட விருப்பின்பேரில் நபர்களைத் தெரிவு செய்துள்ளார்கள். 

எனவே இலங்கையிலுள்ள பலம் பொருந்திய தேசிய கட்சியான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வளர்ச்சியை பட்டிருப்புத் தொகுதியில் இல்லாமல் செய்வதற்கு மறைமுகமாகச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற எமது தொகுதி அமைப்பாளர் இ.தவஞானசூரியம், மற்றும் மாவட்ட அமைப்பாளர் த.கெங்காதரன் ஆகியோரை எமது கட்சியின் தலைவரும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன அவர்கள் உடன் தலையிட்டு, அவர்களை அப்பதவிகளிலிருந்து நீக்கிவிட்டு திறமையானவர்களை இனம்கண்டு இப்பகுதி மக்களுக்கு சேவை செய்யும் வகையில் நியமனங்களை வழங்க வேண்டும் என அவர்கள் தெரிவித்தனார்.


குணரெட்ணம் செல்வமாணிக்கம் ஆகிய நான் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட்டிருந்தேன், அபிவிருதி என்ற வார்த்தைகளைக் கூறித்தான் எம்மை இக்கட்சியில் போட்டியிட வைத்தார்கள்.  இந்நிலையிலும் நாம் வீடுவீடாகச் சென்று அதிக வாக்குகளைப் பெற்றோம். ஆனால் எம்மை வழிநடாத்திய அமைப்பாளர்கள் அவர்கள் கூறியதுபோல் நடந்து கொள்ளவில்லை. தேர்தலுக்கு எந்தவிதமான ஒத்துழைப்புக்களையும் மேற்கொள்வில்லை. தேர்தலில் வெற்றிபெற்றாலும், தோற்றாலும், எம்மைக் கைவிடமாட்டாம் என்றார்கள். ஆனால் தற்போது எம்மைக் கவனிக்கின்றார்கள் இல்லை என்றார்.

கிருஷ்ணபிள்ளை வனிதா ஆகிய நான் நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கைச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தேன். நான் அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்போதிலும், எனக்கு கிடைக்க வேண்டிய விகிதாசார ஆசனத்தை முன்னர் அங்கு பிரதித் தவிசாளராக இருந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. 

எமது கட்சியின் தொகுதி அமைப்பாளரும், மாவட்ட அமைப்பாளரும் சரியான முறையில் இயங்கவில்லை. அவர்கள் உரிய முறையில் இயங்கியிருந்தால் நாம் தேர்தலில் வெற்றிபெற்றிருப்போம் இதனால் நாம் தேல்வியடைந்துள்ளோம். வேட்பாளர்களாகிய எங்களிடம் எதுவும் கலந்தாலோசிக்காமல் விகிதாசார பிரதிநிதித்துவத்தை வழங்கியுள்ளமையை நினைத்து நாம் வேதனை அடைகின்றோம்.

கோசலாதேவி மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்கு மேற்படி கட்சியில் போட்டியிட்டிருந்தேன். இந்த தேர்தலுக்கு எமது கட்சி எந்த வித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. எமது 2 அமைப்பாளர்களும் ஒத்துழைப்புக்களை வழங்கிளிருந்தால் நாம் வெற்றிபெற்றிருப்போம். எனவே இந்த அமைப்பாளர்கள் இருவரையும் உடன் பதவி நீக்கம் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

முத்துலிங்கம் விஜயஜலெட்சுமி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குப் போட்டியிட்டிருந்தேன். எமக்கு எதுவித ஆதரவும் இல்லாமல் பல வெறுப்புக்களுக்கு மத்தியில் செயற்பட்டிருந்தோம், இவற்றால் பல பகைமைகளைச் சந்தித்துள்ளோம் எனவே எமது அமைப்பாளர்கள் இருவரையும்  நீக்கிவிட்டு சிறந்தவர்களை அமைப்பாளர்களாக இட்டுத்தருமாறு ஜனாதிபதி அவர்களை வேண்டி நிற்கின்றோம்.

சின்னத்தம்பி நித்தியானந்தம் மண்முனை தென் மேற்கு பிரதேச சபைக்குப் போட்டியிட்டிருந்தேன். எனது முயற்சியின் காரணமாக பல பிரயத்தனத்தின் மத்தியில் செயற்பட்டிருந்தேன் ஆனால் எமது கட்சியின் அமைப்பாளர்கள் எம்மைக் கவனிக்கவில்லை. அவர்களின் சுயவிருப்பின் பேரில் விகிதாசார அங்கத்தவர்களைத் தெரிவு செய்துள்ளார்கள். இவ்வாறான இரண்டு அமைப்பாளர்களும் இருக்கும் பட்சத்தில் எமது மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் எதிர் காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் எந்த வித அங்கத்தவர்களும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள் என்பதை மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சுப்பிரமணியம் சிவாகரன் ஆகிய நான் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டிருந்தேன். எனது சொந்த முயற்சியினால் வாக்குளைப் பெற்றிருந்தோம் மாறாக எமக்காக நியமிக்கப்பட்ட 2 அமைப்பாளர்கள் இருந்தும் அவர்களால் எமக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை. எமது அமைப்பாளர்களின் செயற்பாடு இவ்வாறு சென்றால் எதிர்கலத்தில் பட்டிருப்புத் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒருஇடம் இல்லாத துர்ப்பாக்கிய நிலையதான் வந்துள்ளது. எனவே இந்த நல்லட்சி அரசாங்கத்தில் இவ்வாறான அமைப்பாளர்களை உடன் ஜனாதிபதி அவர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளரின் பிரத்தியேக செயலாளராக செயற்பட்ட கிருஷ்ணபிள்ரள வதனகுமார் தெரிவிக்கையில்…


தமிழரசுக் கட்சியின் கோட்டையாகவுள்ள பட்டிருப்புத் தொகுதியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்குடன் கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்திலில் களமிறங்கினோம். இதற்கு எமக்கு எமது கட்சியின் பட்டிருப்புத் தொகுதியின் அமைப்பாளர் தவஞானசூரியம், மாவட்ட அமை;பாளர் கெங்காதரன் ஆகியோரின் செயற்பாடுகள் தேர்தலில் வீழ்ச்சிக்குக் கொண்டு சென்றுள்ளது. அவர்கள் இருவரும் தன்னிச்சையாக செயற்பட்டிருந்தார்கள்.

மேற்படி இரண்டு அமைப்பாளர்களுக்குமிடையில் நடைபெற்ற பதவிப்போட்டிதான் இதற்போது இநத நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. எனவே மேற்படி 2 அமைப்பாளர்களையும் ஜனாதிபதி அவர்கள் உடன் பதவி நீக்கிவிட்டு புதியவர்களை நியமிக்குமாறு வேண்டுகின்றேன் என அவர் தெரிவித்தார்.

இவர்வகளின் இக்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் தவஞானசூரியத்தை தொடர்பு கொண்டபோது எமது அலைபேசி அழைப்பை ஏற்படுத்திவிட்டு பின்னர் துண்டித்துவிட்டார். மேலும் மீண்டும், பலமுறை அவரின் அலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டபோது அவர் பதில் வழங்கவில்லை.

எனினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.கெங்காதரனை தொடர்பு கொண்டு கேட்டபோது….. 

பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள 3 பிரதேச சபைகளுக்கும் போட்டியிட்ட வேட்பாளர் பட்டியிலை எமது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப்பாளர் இ.தவஞானசூரியம்தான் தெரிவு செய்திருந்தார். இதில் அவர் என்னுடைய ஒரு ஆலோசனையையும் அவர் கேட்கவில்லை. நான் பிரேரித்தவர்களைக்கூட அவர் அதில் உள்ளடக்கவில்லை. பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள் என்னிடம் வந்து இ.தவஞானசூரியத்தின் செயற்பாடுகள் பற்றி  முறையிட்டார்கள். பின்னர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் போட்டியிட்ட 8 பேருக்கு நான் சிறிய அளவிலான உதவிகளை நல்கியிருந்தேன். 

எமது சில வேட்பாளர்களுக்கு அரசியல் விளங்குதில்லை, சில நிலைப்பாடுகளும் தெரியுதில்லை, அவர்களுக்கு காசு மாத்திரம்தான் தேவையாகவுள்ளது. ஆனால் இன்று அவர்கள் மாவட்ட அமைப்பாளராகிய என்மீது சுமத்தும் குற்றச்சாட்டுக்களை என்னால் ஏற்க முடியாது.  அவர்கள் எனக்கும், கட்சிக்கும். விசுமாசம் இல்லாதவர்கள்தான் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள். எமது கட்சியில் ஒரு சிலரைத் வதிர இப்பகுதியில் தரமான வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை. அது இப்போது தெரிகின்றது. இவ்விடையங்கள் நான் எமது கட்சியின் தலைமைப் பீடத்திற்கு அறிவித்துள்ளேன் என அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: