19 Feb 2018

பிரிந்து சென்ற முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் ஒன்றிணைய வேண்டும் அஷ்ரப் பௌண்டேஷன் புனரமைப்புக் கூட்டத்தில் தீர்மானம்

SHARE
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை விட்டுப் பிரிந்து சென்ற அதன்  போராளிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்க்கமான தீர்மானங்களுடன் ஏறாவூர் அஷ் - ஷஹீத் எம்.எச்.எம். அஷ்ரப் பௌண்டேஷன் புனரமைக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் எம்.ஐ.எம். மாஹீர் தெரிவித்தார்.
மேற்படி அமைப்பின் புனரமைப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 18.02.2018 ஏறாவூரில் இடம்பெற்றது.
கூட்டத்தில் புதிய நிருவாகம் தெரிவு செய்யப்பட்டதோடு பல்வேறு ஆக்கபூர்வமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.

எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மேலும் விவரம் தெரிவித்த செயலாளர் மாஹீர், மேற்படி எமது அமைப்பு நீண்ட காலமாக இயங்கி வந்து இடை நடுவே கைவிடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் போராளிகள் மற்றும் புத்திஜீவிகள் முன்னிலையில் இந்த அமைப்பு மறுசீரமைக்கப்பட்டு புதிய பொது நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பல பொது முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் காட்டித் தந்த வழியில் ஏறாவூரின் எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்திகள் தொடர்பில் ஒருமித்து இயங்குதல்,

பக்கச் சார்பின்றி தூய்மையான இஸ்லாமிய அரசியல் கலாச்சாரத்தினை ஏற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளல்,

மறைந்த தலைவரின் ஞாபகார்த்தமாக ஏறாவூரில் ஒரு கிராமத்திற்கு மர்ஹ{ம் எம்.எச்.எம். அஷ்ரப் மாவத்தை" எனப் பெயரிடல்,

ஏறாவூர் உள்ள ஸக்காத் கிராமத்திற்கு 1300 மீற்றர் நீளமுடைய கொங்கிரீற் வீதி அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தல்,

உள்ளிட்ட பல சமூக அரசியல், கலாசார, நலன்புரி அபிவிருத்தித் திட்டங்களுக்கான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என்றார்.

அமைப்பின் நிருவாகிகளாக பின்வருவோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தலைவர் எஸ்.எம்.எம். ஷஹீத், செயலாளர் எம்.ஐ.எம். மாஹீர்,  பொருளாளர் கே.எம். பைறூஸ், உப தலைவர் எம்.எம். றாஸிக், உப செயலாளர் எம்.பி.ஜே. ஆப்தீன், அத்துடன் நிருவாகக் குழு, கலந்தாலோசனைக் குழு என்பனவற்றுக்கும் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

SHARE

Author: verified_user

0 Comments: