நகர சபைப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற கட்டிட நிர்மாணங்களைச் செய்து கொண்டு கொந்தராத்துக் கொமிஷன் எடுப்பதற்காகவோ மக்களின் வரிப் பணத்தை துஷ்பிரயோகம் செய்வதற்காகவோ திட்டம் தீட்டிக் கொண்டு நாம் சகர சபைத் தேர்தலில் களமிங்கவில்லை என ஏறாவூர் நகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடும் அறபா வட்டார வேட்பாளர் முஹம்மத் சறூஜ் தெரிவித்தார்.
ஏறாவூரில் திங்கட்கிழமை 08.01.2018 அறபா வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், மாற்று அரசியல் தலைமைத்துவம் இல்லாததால் ஏறாவூர் நகர பிரதேசம் நீண்ட காலமாக ஒரு மாயையான அரசியல் பிடிக்குள் சிக்கியிருக்கின்றது.
முதலில் இந்த துரதிருஷ்ட நிலையிலிருந்து மக்களை மீட்டெடுக்க வேண்டும்.
அதன் பின்னரே பிரதேச மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு முழுமையான சேவைச் செய்ய முடியும். இதனை முன்னுதாரமாகச் செய்து காட்டவே நாம் அரசியலுக்குள் நுழைந்துள்ளோம்.
நகர சபையைக் கைப்பற்றுவதன் மூலம் எதனை வரப்பிரசாதமாக அடைந்து கொள்ளலாம் என்று ஒரு சாரார் திட்டம் தீட்டிக் கொண்டு களமிறங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் மக்கள் சார்ந்த அரசியல் வியூகம்.
ஆனால், நாம் அந்த சிந்தனை ஏதுமில்லாமல் இப்பிரதேச மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு பெற்றுக் கொடுக்கலாம் என்று எந்நேரமும் சிந்தித்தவர்களாக இயங்குகின்றோம்.
இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் கூறி மற்றவர்களைத் திட்டித் தீர்க்கின்ற அரசியல் உளறுவாயர்களாக இல்லாமல் குறைந்தபட்சம் நாகரீகமான அரசியலை முன்னெடுக்கும் விதத்தில் நடைமுறையில் காட்டலாம் என்று களமிறங்கியிருக்கின்றோம்.
ஏறாவூரில் செய்து முடிக்கப்பட வேண்டிய எத்தனையோ காரியங்களை இதுவரை காலமும் கோலோச்சிய அரசியல் தலைமைகள் செய்து தரவில்லை.
குறைந்தபட்சம் தங்களிடம் ஒட்டு மொத்த ஏறாவூர் நகருக்கான செயற்திட்ட வரைவு உள்ளதெனக் கூறி மக்களை ஏமாற்றுபவர்கள் ஏறாவூர் புராதன வைத்தியசாலைக்கான வரைபடத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் இருந்த நிலைமையை எமது கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அதனை செய்து காட்டினார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் மக்களை மடையர்களாக்கி கிட்டத்தட்;ட ஒரு வித அரசியல் மாயைக்குள் மக்களை வைத்திருந்தவர்கள் இப்பொழுது மாற்றுத் தலைமைத்துவம் இப்பிரதேசத்தில் உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாமல் திகைத்துப் போயுள்ளார்கள்.
ஏறாவூரில் நாம் எதிர்வரும் காலங்களில் புதிய அரசியல் சரித்திரத்தை நிலைநாட்டுவோம்.” என்றார்.
0 Comments:
Post a Comment