8 Jan 2018

தாங்கவொண்ணா வரியை அறிவிடுவதை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படுவதை நிறுத்தி மக்களுக்கு சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே ஆட்சியைக் கைப்பற்றுவோம்கி

SHARE
எடுத்ததெற்கெல்லாம் மக்களிடம் வரி அறவிட்டு தராங்கவொண்ணா வரிச்சுமையை மக்கள் மீது ஏற்படுத்தி உள்ளுராட்சி மன்றங்கள் என்றாலே மக்களிடம் வெறுப்பேறுமளவுக்கு உள்ள நிலைமையை மாற்றி முழுவதுமாக மக்களுக்குச் சேவை செய்வதை நடைமுறையில் காட்டவே நாங்கள் உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றப் போகின்றோம் என கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தவிசாளருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
ஏறாவூரில் ஞாயிற்றுக்கிழமை 07.01.2018 வட்டார தேர்தல் காரியாலயத்தைத் திறந்து வைத்த பின்னர் அவர் உரையாற்றினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஒரு போதும் அதன் தனித்துவத்தை இழக்கவில்லை. சமயோசிதமான சிந்தனை மூலம் அது அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு அரசியல் வியூகங்களை வகுத்துச் செயற்பட்டு வந்திருக்கின்றது என்பது அதன் கடந்த கால வரலாறுகளிலிருந்து தெரிந்து கொள்ள முடியும்.

நாங்கள் எங்கெங்கெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்றோமோ அங்கெல்லாம் ஆட்சியைக் கைப்பற்றுவோம்.

இது உறுதியான விடயம். அரசியல் ரீதியான வியூகங்களில் நாம் ஒருபோதும் தோற்றுப்போனதில்லை.

உள்ளுராட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றபோது நாட்டிலுள்ள 70 சதவீதமான உள்ளுராட்சி சபைகளின் அடுத்து வரும் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியே கைப்பற்றும். அந்த வியூகத்தின் அடிப்படையிலேயே நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடுகின்றோம்.

அது மட்டுமல்ல, நாட்டின் அடுத்த ஜனாதிபதியாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்ஹவே கோலோச்சப் போகின்றார். இந்த கள நிலவரங்களைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு விலை போய் விட்டோம் என ஒரு சாரார் கொக்கரிப்பது அரசியல் அறிவுச் சூனியமான பேச்சேயன்றி வேறில்லை.

சாணக்கியத்தோடு நாம் சிந்திக்க வேண்டும். அரசியல் வியூகம் அமைப்பதில் மறைந்த தலைவர் அஷ்ரபால் வழிநடாத்தப்பட்டவர்கள் நாம். மாறி மாறி ஆட்சிக்கு வந்த எதிர்க்கட்சி ஆளும் கட்சி எல்லோரது காலத்திலும் நாம் சரியான வியூகங்களை வகுத்து அரசியல் ஆட்சியதிகாரத்தில் பங்கெடுத்திருக்கின்றோம். இதற்கு சிறந்த அரசியல் சாணக்கியம் வேண்டும். மக்களின் மன நிலையையும் கள நிலைவரங்களையும் நாடி பிடித்து அறிய வேண்டும்.

ஏறாவூர் நகரசபையையும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து நாம் முழுமையாகக் கைப்பற்றுவோம்.

ஒட்டு மொத்தமான ஊரின் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதற்காக நாம் இந்த நகர சபையை நாம் நிறுவுவோம்.

கிழக்கு மாகாணத்திலே சிறந்த நவீன சந்தை, இலத்திரனியல் வாசிகசாலை, சுமார் 2500 பேர் அமர்ந்து நிகழ்வுகளைக் கண்டு களிக்கக் கூடிய கலாசார கேட்போர் கூடம், நவீன வசதிகள் கொண்ட அரசாங்க மற்றும் தனியார் வைத்தியசாலைகள் ஏறாவூரில் அமையும் இதனை விட ஏறாவூர் நகர சபை அந்தஸ்தில் இருந்து மாநகர சபை என்ற அந்தஸ்தைப் பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: