8 Jan 2018

அறுவடைக் காலத்திலேயே நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக நெற் களஞ்சியங்களைத் திறப்பதற்கு ஏற்பாடு மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் அரசாங்க அதிபருக்கு நன்றி தெரிவிப்பு

SHARE
மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக அறுவடைக் காலத்திலேயே நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக மாவட்டத்திலுள்ள நெற் களஞ்சியங்களைத் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது விவசாயிகளுக்கு பெரும் வரப்பிரசாதமாகும் என மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக உன்னிச்சைக்குளம் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் முகாமைத்துவக் குழுத் தலைவர் கே. யோகவேள் ஞாயிற்றுக்கிழமை 07.01.2018 கருத்து வெளியிட்டார்.

அவர், மேலும் தெரிவித்ததாவது

இதுவரை காலமும் மட்டக்களப்பு மாவட்டத்தில் விளைவிக்கப்படும் நெல்லை விளைச்சல் காலத்திலேயே விற்பதற்கு சீரான ஏற்பாடுகள் செய்த தரப்பட்டிருக்கவில்லை.

இப்பகுதியில் விளைவிக்கப்பட்ட பெரும்போக மற்றும் சிறுபோக அறுவடை நெல்லை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் திண்டாடனர்.
அதனால், உத்தரவாதமற்ற விலையில் தனியார் வியாபாரிகளுக்கே நெல்லை விற்க வேண்டியிருந்தது.

இதுவரை காலமும் அம்பாறை மற்றும் பொலொன்னறுவை மாவட்டங்களின் நெல் அறுவடைக் காலத்தை மையமாக வைத்துத்தான் நெற் சந்தைப்படுத்தும் சபை பெப்ரவரி மாதக் கடைசியில் மட்டக்களப்பிலுள்ள நெற் களஞ்சியங்களை இயக்க ஆரம்பித்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இந்த நிலைமை இருந்து வந்ததால் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் தமது விளைச்சல் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கடன் பளுவால் விரக்தியடைந்திருந்தார்கள்.

கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு வாக்களிக்கப்பட்ட எந்தவொரு தேவைகளையும் நிறைவேற்றித் தருவதற்கு அதிகாரிகள் தவறி விட்டதனால் விவசாயிகள்  ஏமாற்றத்தில் உழல வேண்டியிருந்தது.

இதுபற்றிய மாவட்ட விவசாயிகளின் ஆதங்கம் மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமாரிடம் முன்வைக்கப்பட்டது.

அதன் காரணமாக  அரசாங்க அதிபர் எடுத்துக் கொண்ட அயராத முயற்சியின் பயனாக இப்பிரதேசத்தில் விளைவிக்கப்படும் நெல்லை நெற்சந்தைப்படுத்தும் சபையினூடாக விற்பனை செய்வதற்கு ஏற்ற வகையில் ஜனவரி 22ஆம் திகதி மாவட்டத்தில் உள்ள 8 அரச நெல் கொள்வனவு நிலையங்களிலும் நெல்லை கொள்வனவு செய்வதற்கு ஏற்ற ஒழுங்குகளைச் செய்துள்ளார்.

இதற்கும் மேலதிகமாக களஞ்சியசாலை இடப் பற்றாக் குறைக்கு மாற்று ஒழுங்காக  வாழைச்சேனை மற்றும் வவுணதீவுப் பிரதேசத்தில் தலா 1500 மெற்றிக் தொன் நெல்லைக் களஞ்சியப்படுத்தக் கூடியதாக களஞ்சியசாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் உத்தரவாதமளித்துள்ளார்.

இது மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.
விவசாயிகள் எதிர்நோக்கும், நெல்கொள்வனவு, பாய்ச்சல் நீர், காட்டு யானைத் தொல்லை, மேய்ச்சல் தரை, குளங்கள், வாய்க்கால்கள் புனரமைக்கப்படாமை, சட்டவிரோத மணல் அகழ்வு, உர மானியம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு கரிசனை காட்டவில்லை என்ற காரணத்தினால் கடந்த காலங்களில் மாவட்ட விவசாயிகளின் விவசாயக் கூட்டங்களுக்கு அரசியல்வாதிகள் வரக் கூடாது என்று நாம் எதிர்ப்பைக் காட்டி வந்தோம்” என்றார்.

SHARE

Author: verified_user

0 Comments: