முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்த காலத்தில் மக்கள் மத்தியில் 5 பானாக்களைக் கொண்டு செயற்பட்டார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுதது சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போரதீவுப்பற்றுப் பிரதேச சபைக்காக திருப்பழுகாமம் வட்டாரத்தில் போட்டியிடும் இ.கந்தசாமி, மற்றும் வி.ஆர். மகேந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் கட்சியின் காரியாலயம் ஒன்று வியாழக்கிழமை (11) மாலை திரப்பழுகாமத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்……
மஹிந்த ராஜபக்ச தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்காக பணத்தைக் கொடுத்து கொள்வனவு செய்வதற்கும், பதவியைக் கொடுத்துக் கொள்வனவு செய்வதற்கும், பயமுறித்திப் பார்த்தும், பணயம் வைத்தும், இறுதியாக படுகொலைகளையும் செய்து பார்தார். ஆனால் இதிலுள்ள எந்தப் பானாவுக்கும்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடிபணியவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஐக்கியத்தைப் பேண வைப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பல சிரேஸ்ட்ட தலைவர்கள் அவர்களது உயிரை மாய்த்திருக்கின்றார்கள்.
யோசப் பரராசசிங்கம் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார், ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டார், சிவனேசனை கிளைமோர் குண்டு வைத்து தாக்கி கொலை செய்தார்கள், சந்திரநேருவைப் படுகொலை செய்தார்கள், இவ்வாறு பல படுகொலைகளைச் செய்தும்கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பை அவர்களால் இன்றுவரை அசைக்க முடியாமல் போய்விட்டது.
ஜே.வி.பி கட்சியை உடைத்தார்கள், ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், தோட்டத் தொழிலாழர்களை உடைத்தார்கள், முஸ்லிம் கட்சிகளை உடைத்தார்கள், அவர்களால் உடைக்க முடியாமல் இருக்கின்ற கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரம்தான்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது ஒரு சோரம் போகின்ற கட்சியல்ல, பணத்திற்கு விலைபோகின்ற கட்சியல்ல, பதவிக்காக தம்மை இழந்துபோகின்ற கட்சி அல்ல, உண்மைக்காக, உரிமைக்காக, மக்களோடு மக்களாக இருந்து கொண்டு, சோதனைகள் வந்தாலும், வேதனைகள் வந்தலும், அதனை அசைக்க முடியாத கட்சிதான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பதை வரலாறு கூறியிருக்கின்றது.
அராஜகத்தனத்தைக் கையில் எடுத்துக் கொண்ட ஆட்சியாளர்கள், இந்தக் கட்சியை கிழக்கு மாகாணத்திலிருந்து துடைத்தெறிய வேண்டும் தமிழ் தேசியத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கோடு எஜமானிகளாக இருந்து கொண்டு தங்களது ஏவலாளிகளை ஏவிவிட்டார்கள், இந்த ஏவலாளிகள் கூரையைப் பிரித்தார்கள், எமது தலைவர்களைப் பலி எடுத்தார்கள், ஆனால் எமது தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட கட்சியை எவராலும் அழிக்க முடியாது.
கடந்த காலங்களில் ஒவ்வாரு கட்சிகளும் எமக்கு இழைத்த அநீதிகளை எமது மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும், இவ்வாறு அவர்கள் இழைத்த அநீதிகளுக்கு அவர்கள் இன்னும் பாவ மன்னிப்புப் பெறவில்லை. கொக்கட்டிச்சோலைப் படுகொலை, மகிழடித்தீவு படுகொலை, மையிலந்தனைப் படுகொலை, குமுதினிப் படகு படுகொலை, நாகர்கோயில் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை, புதுக்குடியிருப்பு படுகெலை, சத்திருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலைப் படுகொலை, என இவ்வாறு எமது மக்களைப் படுகொலை செய்தவர்கள் ஆனால் இந்தப் படுகொலைகளைச் செய்த அனைவரும் இன்னும் உயிரோடுதான் இருக்கின்றார்கள். இவைகளனைத்தும் இந்த இலகத்தின் பார்வையில் செய்யப்பட்டதாகும். ஆனால் நீதிதேவதை இன்னும் கண்ணைத் திறக்கவிலலை, கண்ணைத் திறப்பதற்கு இந்த பெரும் தேசியக் கட்சிகள் இன்னும் வாப்புக் கொடுக்கவில்லை. எனவே ஐக்கிய தேசியக் கட்சியோ, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோ தமிழ் மக்கள் மத்தியில் வாக்குக் கேட்பதற்கு யோக்கியமற்ற கட்சிகளாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராசசிங்கம் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதிதி தவிசாளர் இ.பிரசன்னா, உறுப்பினர் கோ.கருணாகரம், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment