உரிமை வேறு, அபிவிருத்தி வேறு என்று கூறி சமூகத்தைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான வியூகம்பற்றி அவர் ஞாயிற்றுக்கிழமை 10.12.2017 கருத்து வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் கூறிய அவர், சிலர் சமூகத்திற்கு அபிவிருத்தி முக்கியமா உரிமை முக்கியமா என விதண்டாவாதத்தை முன்வைக்கின்றனர்.
கடந்த 30 வருட கால ஆயுத முரண்பாடுகளின் விளைவாக இந்த நாட்டின் முஸ்லிம் சமூகம் இடையில் அகப்பட்டுக் கொண்டுஇழந்தவைகள் ஏராளம்.
யுத்த கால நிவாரணம், வாழ்வாதார உதவித் திட்டங்கள், புனர்வாழ்வு, புனரமைப்பு என்பனவற்றிலும் யுத்தத்திற்குப் பின்னரான மீளமைப்பிலும் முஸ்லிம் சமூகம் ஆட்சியாளர்களாலும் உதவி வழங்கும் சர்வதேச அமைப்புக்களாலும் கண்டு கொள்ளப்படவில்லை.
அதேவேளை, யுத்த காலத்திலும், யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலத்திலும் கோலோச்சிய இனவாத ஆட்சியாளர்களால் இலங்கை முஸ்லிம் சமூகம் இனவாதக் கண்ணோட்டத்துடன் நோக்கப்பட்டு அபிவிருத்திகளுக்குள் உள்வாங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றது.
மேலும், உரிமை தொடர்பான விடயங்களிலும் ஆயுத முரண்பாட்டில் ஈடுபட்ட அனைத்துத் தரப்பினராலும் இந்த சமூகம் கணக்கிலெடுக்கப்படாமலும் இன அழிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்த கடந்த கால கசப்பான அனுபவம் எமக்குள்ளது.
எனவே, இழந்து போனதும் எமக்கு இல்லாமற் செய்யப்பட்டதுமான உரிமைகளையும் அதேவேளை அழிக்கப்பட்டமைக்கான மீளமைப்பு அபிவிருத்திகளையும் தண்டவாளம் போல் சமாந்தரமாக அடைந்து கொள்ள வேண்டிய தேவை இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்றது.
இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதியாக இருக்கின்றது.
நாம் எதிர்வருகின்ற உள்ளுராட்சி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களிலும் எமது உறுதியான பலத்துடன் பேரம்பேசுகின்ற சக்தியாக உருவெடுத்து உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ள வேண்டும்.
முதலில் அபிவிருத்தியா, பின்னர் உரிமையா ? முதலில் உரிமையா பின்னர் அபிவிருத்தியா என்ற வெட்டிப் பேச்சுக்கு இனி இடமில்லை.
எமக்கு அழிவுகளிலிருந்து மீள் எழும்புவதற்கான அபிவிருத்தியும் தனித்துவத்தைப் பேணிப்பாதுகாப்பதற்கான மனித உரிமைகளுடன் கூடிய முழுமையான உரிமையும் சமாந்தரமாகத் தேவை.
அதற்காகவே நாம் நல்லாட்சியில் இணைந்தோம். இனியும் ஆட்சியாளர்களுடன் அவற்றையே வலியுறுத்துவோம். எமது எதிர்காலக் கோஷமும் அபிவிருத்திக்கும் உரிமைக்குமானதாக சமாந்தரமானதாகவே இருக்கும்” என்றார்.
0 Comments:
Post a Comment