12 Dec 2017

மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

SHARE
மட்டக்களப்பில் 31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளார்கள்.வருடந்தோறும் மாவட்டத்தில் 18 ஆயிரம் பேருக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு  பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் வரை  31 எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு  பொறுப்பு வைத்தியர் அனுஷியா ஸ்ரீசங்கர் (Medical Officer in charge Sexually Transmitted Disease and Aids Control Program Batticaloa District) தெரிவித்தார்.

எயிட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள  14 பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளிலும் முழு முயற்சியுடன் இடம்பெற்று வருவது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை 10.12.2017 இந்த விவரங்களைத் தெரிவித்தார்.

இது பற்றி மேலும் தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 31 பேர் எயிட்ஸ் நோய்க்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர்களில் 26 பேர் கொழும்பிலும் 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் உட்பட 5 பேர் மட்டக்களப்பு மாவட்ட பாலியல் பரிமாற்ற நோய், எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் நேரடிக் கண்காணிப்பில்  மட்டக்களப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

இந்த 31 பேரிலும் அரைவாசிக்கும் அதிகமானோர் ஆண்கள் என்பதும் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளான இவர்களில் 90 வீதம்  பெரும்பாலும் வெளியிடங்களிலிருந்தே தொற்றுக்குள்ளாகியிருக்கின்றார்கள் என்பதும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாலியல் பரிமாற்ற நோய், மற்றும் எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டு செயற்திட்டங்களின்  விழிப்புணர்வு முழுமூச்சாக இடம்பெற்று வருகின்றது.

இரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் எயிட்ஸ் தொற்று அடுத்தவருக்கு பரப்பப்படாமல் இருப்பதையும்  பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும்  மக்களிடம் ஊக்குவிப்பதே எமது விழிப்பூட்டலின் நோக்கம்.

எயிட்ஸ் ஒரு ஆட்கொல்லி நோய் என்பதாலும் சமூக அந்தஸ்து மற்றும் அவமானம் என்பனவற்றாலும் எயிட்ஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தங்களை மருத்துவ சிகிச்சைகளுக்குக் கூட வெளியே இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்து வரும் நிலைமை தற்போதைய விழிப்பூட்டல்களால் மேம்பாடு கண்டு வருகின்றது.

மட்டக்களப்பில் வருடாந்தம் சாதாரணமாகவே 12 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மாரும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 2400 பேரும், வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக வருவோர்களில் சுமார் 3600 பேரும், கிராமங்களுக்குச் சென்று சுமார் 5000 - 6000 பேரும் இரத்தப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றார்கள்.

“எல்லோரும் முக்கியம்” என்ற எயிட்ஸ் நோய்த் தடுப்பு தொனிப் பொருளின் அடிப்படையில் எச்ஐவி தொற்றுள்ளவரையும், தொற்றில்லாதவரையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

தொற்றுள்ளவருக்கு சிகிச்சையளிப்பதன் மூலம் மற்றவருக்கு எச்ஐவி தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும், அதேவேளை, எச்ஐவி தொற்றில்லாதவருக்கு விழிப்புணர்வையூட்டி அவரைத் தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும்.

எயிட்ஸ் ஆட்கொல்லி நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பதில் மருத்துவ உலகம் முன்னேறியிருக்கின்றது.” என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE

Author: verified_user

0 Comments: