எம்மைப் பலர் தூற்றுவார்கள், ஏசுவார்கள் இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கேட்க முடியாதவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்க முடியாது. தனிமனித மான அவமானங்களைத் துறந்தவர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டிகளாக வர முடியும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.
வியாழக்கிழமை (21) மட்டக்களப்பு மாநகர சபை உட்பட ஏழு உள்ளுர் அதிகார சபைகளுக்கான வேட்புமனுக்களை மட்டக்களப்பு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரிடம் கையளித்ததன் பின்னர் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற கட்சி ஆதரவாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது வேட்பாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வீட்டுக்காக வேலை செய்ய வேண்டும். எமக்கு மாறாக இருக்கின்ற நணபர்கள் சகோதரர்களைப் புண்படுத்தாத விதத்தில் அவர்களோடு சகஜமாகப் பேசி அவர்களையும் எம்முடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவர்கள் எங்களைப் பிரிந்து வேலை செய்வதற்கு வேட்புமனுத் தாக்கல் செய்தது என்பது மட்டும் ஒரு காரணமாக இருக்க முடியாது. வேட்புமனு அப்படியே இருக்கலாம் அல்லது அவர்கள் எம்முடன் இணைந்து தங்கள் வேட்புமனுக்களை தாங்களாகவே நிராகரித்துக் கொண்டும் கூட எங்களுடன் செயற்பட முடியும். நாங்கள் அவர்களோடுதான் மிகவும் முக்கியமாகப் பழக வேண்டும். எமது வேட்பாளர்கள் எம்முடன் தான் இருப்பார்கள். எங்களுக்கு அந்நியப்பட்டு நிற்கின்ற வேட்பாளர்களை நாங்கள் எங்களுக்குள்ளே எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டியை விட்டு வெளியில் சென்ற பசுக்களை மீண்டும் பட்டியினுள் சேர்ப்பதே திறமையான பட்டிக்காரனின் செயற்பாடாகும்.
எம்மைப் பலர் தூற்றுவார்கள், ஏசுவார்கள் இவற்றையெல்லாம் பொருத்துக் கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் கேட்க முடியாதவர்கள் மக்களுக்குத் தலைமை தாங்க முடியாது. எங்களுடைய ரோசம் என்பவற்றையெல்லாம் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்கு நண்மை தரக்கூடிய விடயத்திற்காக நாங்கள் எமது ரோசங்களையெல்லாம் துறக்க வேண்டும். தனிமனித மான அவமானங்களைத் துறந்தவர்கள் தான் மக்களுக்கு வழிகாட்டிகளாக வர முடியும். நாங்கள் இப்போது ஒரு அணிக்குள்ளே வந்திருக்கின்றோம் என்கின்ற விடயத்தை மக்களுக்குச் சொல்ல வேண்டும். தனித் தனி மனதர்களாக இருந்தவர்கள் தற்போது ஒரு மிகப் பெரிய கட்சியின் வேட்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளீர்கள். எனவே எமது வேட்பாளர்களின் முழு அடையாளமும் எமது கட்சி என்பதையே எல்லோருக்கும் சொல்ல வேண்டும்.
வட்டாரத்தில் நியமிக்கப்பட்ட வேட்பாளர்கள் தங்கள் வட்டாரங்களில் முழுமையாக வேலை செய்ய வேண்டும். பட்டியலில் இருப்பவர்கள் சபை பூராகவும் வேலை செய்ய வேண்டும் ஒவ்வொரு வட்டார வேட்பாளர்களும் அதிகூடிய வாக்குகளால் வெற்றிபெறும் போதுதான் எமக்கு பட்டியலில் இருந்து கூடுதலானவர்களை நியமிக்க முடியும். ஒரு சபையை ஆரோக்கியமான சபையாகக் கொண்டு செல்ல வேண்டும் என்றால் எமது உறுப்பினர்கள் அங்கே மிக அதிகமாக இருக்க வேண்டும். எனவே எல்லோரும் கடுமையாக வேலை செய்ய வேண்டும்.
தேர்தல் சட்டங்கள் நடைமுறைகள் பற்றி கட்சியின் செயலாளர்களுக்கு மற்றும் சுயேட்சைக் குழுக்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்படும். அதன் பின்னர் நாங்கள் வேட்பாளர்களுக்கு அது பற்றி தெளிவுபடுத்துவோம். மிகவும் அமைதியாக இந்த தேர்தலை முகங்கொடுக்க வேண்டும். தேர்தல் சட்டங்கள் மிகவும் கடுமையானவை தற்போது இருக்கின்ற தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமான ஆணைக்குழு. மிகக் கவனமாகவும், நிதானமாகவும் செயற்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment