கடந்த காலத்தில் நிலைகொண்டிருந்த யத்தசூழலில் தமிழினம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பெறுமதிவாய்ந்த சொத்துக்களையும் இழந்து நிற்கின்றது. இந்த நிலமை தற்போது மாற்றமடைந்து தமிழினம் ஓரளவு தலை நிமிர்ந்து நிற்கின்றது. என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மார்கண்டு நடராசா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பட்டாபுரம் கிராமத்தில் திங்கட் கிழமை இரவு (18) நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களின் ஒன்றுகடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்…..
தற்போதைய காலகட்டத்தில் இருந்த அரசியலமைப்பைக்கூட மாற்றியமைத்து எம்மினம் எதிர்பார்த்துநிற்கும் தீர்வுகள் இல்லாவிடினும் தற்போது இருக்கின்ற நிலமையினைவிட சிறப்பான தீர்வுகள் ஏற்படுத்தப்பட்டு அதற்குரிய சட்டங்களும் இயற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்தான் இந்த அரசியலமைப்பைக் குழப்பி இல்லாமல் செய்வதற்கு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒரு சிறுபகுதியினர் செயற்பட்டுக் கொண்டு வருகின்றார்கள். எனவே இரண்டு பெரும்பான்மைக் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி நடத்துக்கின்ற இந்த அரசாங்கத்திலிருந்து எமது மக்களுக்கான தீர்வுகளைப் பெறமுடியாவிடின் இனி எந்தக்காலத்திலும் நாம் அந்த தீர்வைப் பெறமுடியாது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்பால் இருக்கின்றார்களா என்பதை சர்வதேசம் உற்றுநோக்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச்சின்த்திற்கு வாக்களிக்க வேண்டும். இம்முறை நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் பிரதேசத்தில் அமைந்துள்ள அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தமிழ் தேசியக் கூட்டடைப்பு வெற்றிபெற்று ஆட்சியமைக்கும்.
கடந்த மகிந்த அரசாங்கத்தில் ஒளிந்து இருந்தவர்கள், எமது மக்கள் அல்லல்பட்டபோது உல்லாசமாக வாழ்ந்தவர்கள், தற்போது எமது பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர்கள் என்றும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் என்றும் வந்து மக்களைத் திசைத்திருப்பிக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல்காலத்தில் இவர்கள் இறக்குமதி செய்யப்பட்டு, எமது மக்களை மூளைச் சலவை செய்ய முற்பட்டிருப்பதானது அவர்களின் போலி முகம் தென்பட்டிருக்கின்றது. தற்போது தேர்தல் காலம் ஆரம்பிக்கப்பட்டவுடனே எமது கிராமங்களிலுள்ள சில வீதிகளும் செப்பனிடப்படுகின்றன. இதுவரைகாலமும் கண்டிராத அபிவிருத்தி தேர்தல் வந்தவுடன் திடீரென ஆரம்பிப்பதற்கு அவர்களுக்கு ஞானம் வந்துள்ளது என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி செயலாளர் துசியந்தன், முன்னாள் பிரதே சபை தவிசாளர் வி.ஆர்.மகேந்திரன், மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
0 Comments:
Post a Comment