மட்டக்களப்பில் மட்டக்களப்பு மாநகர சபை உட்பட 3 உள்ளுராட்சி மன்றங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் புதன்கிழமை 20.12.2017 சுயேச்சைக் குழுவாக கட்டுப் பணம் செலுத்தியது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.
இதுபற்றி மேலும் தெரிவித்த அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம் நிஸாம் காரியப்பர் அவர்கள் விஷேட ஹெலிகொப்டர் மூலம் வன்னிப் பகுதிக்குச் சென்று ஸ்ரீலமுகா சார்பாக கட்டுப்பணத்தைச் செலுத்தி விட்டு மட்டக்களப்பை நோக்கி வரும்போது காலநிலை சீரின்மையால் குருநாகல் கடந்து ஹெலியில் தொடர்ந்து பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு விட்டது.
அதனால், கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால நேரம் முடிவடைய உள்ள தறுவாயில் ஸ்ரீலமுகா தலைவரின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு மாநகர சபை, கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை மற்றும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை ஆகியவற்றுக்கு சுயேச்சைக் குழுவாக கட்டுப்பணம் செலுத்த வேண்டியேற்பட்டு விட்டது.
ஸ்ரீலமுகா சுயேச்சைக் குழு சார்பாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு சாஹ{ல் ஹமீது முஹம்மது அஸீஸ், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்கு முஹம்மது தம்பி முஹம்மது அன்வர், கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபைக்கு ஏ.ஜி. முஹம்மது றமீஷ் ஆகியோர் தலைமையில் கட்டுப் பணம் செலுத்தினர்.” என்றார்.
0 Comments:
Post a Comment