26 Nov 2017

மீனவர்களின் படகுகள், துறைமுகத்துக்கு அப்பாலுள்ள முகத்துவார பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் மோதி சேதமடைவதைத் தடுக்குமாறு வேண்டுகோள்

SHARE
மட்டக்களப்பு  வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் படகுகள், துறைமுகத்துக்கு அப்பாலுள்ள முகத்துவார பகுதியில் காணப்படும் கற்பாறைகளில் மோதி சேதமடைவதாகவும் இதனை நிவர்த்தி செய்து தருமாறும் மீனவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கவென்று செல்லும் 350 மீன்பிடிப் படகுகள் காணப்படுவதாகவும்,  ஒரு படகுக்கு மாதாந்தக் கட்டணமாக 900 ரூபாய், துறைமுகத்துக்குச் செலுத்துவதாகவும் உரிய முறையில் பணம் அறவிடும் நிர்வாகம் மீனவர்கள் பிரச்சினைத் தொடர்பில் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க, முகத்துவார வழியினூடாக செல்லும் போது, அவ்வழியால் காணப்படும் கற்பாறைகள் நீரில் மறைந்து காணப்படுவதால் கண்களுக்கு தென்படாமல் அதனூடாக செல்வதால் படகுகள் பாறைகளில் மோதி சேதமடைகின்றது. இது ஆற்றில் நீர் அதிகரிக்கும் காலங்களில் அதிகமாக காணப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த வருடத்தில் மாத்திரம், இருபது படகுகள் சேதமடைந்துள்ளதுடன், இந்த வாரத்தில் மாத்திரம் நான்கு படகுகள் சேதமடைந்துள்ளதாகவும் பாரிய சேதங்களுக்கு மாத்திரம், காப்புறுதி பணம் வழங்குவதாகவும் பகுதியளவு சேதங்களுக்கு காப்புறுதி பணம் கிடைப்பதில்லை என்றும் மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.

எனவே, இவ்விடயமாக, பல தடவை மீன்பிடி அமைச்சருக்கும், அது தொடர்பான அதிகாரிகளுக்கும் தெரிவித்திருந்தும் இதுவரைவில் எங்களது பிரச்சினைக்கானத் தீர்வு கிடைக்கவில்லை என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயமாக உடனடியான நடவடிக்கை மேற்கொண்டு வோயா (மிதப்பு கட்டை) போட்டு, மீனவர்களின் படகுகள் சேதமடைவதை தடுப்பதற்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மீனவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





SHARE

Author: verified_user

0 Comments: