தமது அரசியல் ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகளும் போதைப் பொருள் வர்த்தகர்களுக்கு உதவிகரமாக இருந்து வருவதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஷிப்லி பாறூக் தெரிவித்ததார்.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் ஏறாவூரிலுள்ள பொது அமைப்புக்களுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை 16.11.2017 பதில் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. றமீஷா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஷிப்லி பாறூக், மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் போதைப் பொருள் வர்த்தகம் என்பது உடனடிப் பணக்காரர்களாகும் இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களின் போதைப் பொருள் விற்பனை, பாவனை பற்றிய குற்றச் செயல் தரவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி உள்ளிட்ட முஸ்லிம் பிரதேசங்களே முன்னிலை வகிக்கின்றன.
இது வெட்கக் கேடானதாக இருக்கின்ற ஒரு விடயமாக இருக்கின்ற அதேவேளை மனித குலத்திற்கெதிரான சமூக விரோதச் செயலுமாகும்.
இந்த மாவட்டத்திலே 26 சத வீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களில் ஒரு சாராரான சமூக விரோத போதைப் பொருள் பணக்காரர்களும், அரசியல்வாதிகளில் ஒரு சிலரும் இந்த மனித குலத்திற்கெதிரான குற்றச் செயலுக்குத் துணைபோகின்றனர் என்பது வெறுக்கத்தக்க ஒரு விடயமாக உள்ளது.
சமீபத்தில் கேரளக் கஞ்சாவைக் கடத்தி வந்த ஒருவரைப் போதைப் பொருள் தடுப்புப் பொலிஸார் சுமார் 3 கிலோகிராம் கஞ்சாவுடன் கைது செய்திருந்தவேளையில் அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் கஞ்சா கடத்தியவர் வசம் வெறும் 50 கிராம் கஞ்சாவே இருந்தது என்று பொலிஸாரை பணிக்கும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் இடம்பெற்றிருப்பது கேவலமான ஒரு அரசியல் முன்னெடுப்பாகும்.
சமூகத்தைப் பற்றி கவனத்தில் எடுக்காத இழிநிலை அரசியல்வாதிகளால் ஒட்டு மொத்த மனித சமூகமும் சீரழியவேண்டித்தான் வரும். இது ஒரு துரதிருஷ்ட நிலைமையாகும்.
இத்தகைய கேவலமான அரசியல்வாதிகளை சமூகம் வெறுத்தொதுக்க வேண்டும்.
குற்றவாளிகள் எவராக இருந்தாலும் சட்டங்கள் அவர்கள் மீது பாய்ந்து தண்டனைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையே நான் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றேன்.
அரசாங்கத்தின் மூலமாக கிடைக்கின்ற ஒதுக்கீடுகள் கட்சி, பிரதேச இன மத வேறுபாடுகளுக்கப்பால் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதிலும் அபிவிருத்தி, நீதி நியாயம் இந்த நாட்டின் எல்லாப் பிரஜைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்பதிலும் நான் உறுதியாக இருந்து வருகின்றேன். இந்த நாட்டின் சொந்தக் காரர்களான தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சீரழிக்க எவருக்கும் இடமளிக்கக் கூடாது.” என்றார்.
0 Comments:
Post a Comment